விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த குவிந்து வரும் தொண்டர்கள் – கோயம்பேடு பகுதியில் போக்குவரத்து மாற்றம்!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் திரண்டு வருவதால் சென்னை கோயம்பேடு பகுதி மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிகிறது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தேமுதிக…

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் திரண்டு வருவதால் சென்னை கோயம்பேடு பகுதி மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிகிறது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உள்ளதாகவும்,  சுவாசிப்பதில் சிக்கல் இருப்பதால் வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வருவதாகவும் தேமுதிக தலைமையகம் இன்று காலை அறிவித்திருந்தது.  இந்நிலையில் இன்று காலை விஜயகாந்த் உயிரிழந்ததாக மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்நிலையில்,  விஜயகாந்தின் உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளியானது முதலே, அங்கு ஏராளமான தொண்டர்களும்,  பொதுமக்களும் குவியத் தொடங்கியுள்ளனர்.  இதனால் அந்தப் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.  கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தின் வாசலில்  ரசிகர்கள்,  தேமுதிகவினர்,  கட்சித் தொண்டர்கள், முக்கிய நிர்வாகிகள்,  திரைப்பட நடிகர்கள்,  சின்னத்திரை நடிகர்கள்,  பொதுமக்கள் என அனைவரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இதனால்,  கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் வெளியேற முடியாத அளவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.  இதனால், தேமுதிக அலுவலகம் முன்பு குவிந்த தொண்டர்களை ஒழுங்குப்படுத்தும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
கோயம்பேடு மேம்பாலம் அருகே ஏற்பட்டுள்ள வாகன நெரிசலை கட்டுப்படுத்த வாகன ஓட்டிகள் பாடி மேம்பாலம்,  திருவீதி அம்மன் சர்வீஸ் ரோடு,  சாந்தி காலனி வழியாகச் செல்ல போக்குவரத்து காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.