போலீசார் தாக்கியதில் உயிரிழப்பு… இறந்தவரின் மனைவிக்கு ரூ.8 லட்சம் இழப்பீடு வழங்க மனித உரிமை ஆணையம் உத்தரவு!

போலீசார் தாக்கியதில் பலியானவரின் மனைவிக்கு 8 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கோயில் திருவிழாவில் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டதாக, திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா…

போலீசார் தாக்கியதில் பலியானவரின் மனைவிக்கு 8 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கோயில் திருவிழாவில் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டதாக, திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா மட்டப்பாறை கிராமத்தைச் சேர்ந்த செந்தில் குமாரை வடமதுரை போலீசார், 2010ம் ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு, சிறைக்கு அழைத்துச் சென்ற போது உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட செந்தில்குமார் வழியில் உயிரிழந்தார்.

காவல் துறையினர் தாக்கியதில் தனது கணவர் இறந்து விட்டதால், சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என செந்தில் குமாரின் மனைவி சிவகாமி, மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்தார்.

புகாரை விசாரித்த மனித உரிமை ஆணையம், மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வு பிரிவின் விசாரணை அறிக்கையில், செந்தில்குமார் உயிரிழந்த விவகாரத்தில் மனித உரிமை மீறல் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, சிவகாமிக்கு ஒரு மாதத்தில் 8 லட்சம் ரூபாய் இழப்பீட்டை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

இந்த தொகையை வடமதுரை முன்னாள் சிறப்பு எஸ்.ஐ.கள் பெருமாள், சுப்பிரமணியன், முன்னாள் ஏட்டுக்கள் கருப்பையா, சிங்கராயர் ஆகியோரிடம் இருந்து தலா 2 லட்சம் ரூபாய் வீதம் வசூலிக்கவும், அவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.