காது கேளாதோருக்கான சர்வதேச விளையாட்டுப் போட்டியில் இந்தியா 8 தங்கம், 1 வெள்ளி, 7 வெண்கலம் உள்பட 16 பதக்கங்களை வென்று இந்தியா புதிய சாதனை படைத்தது. இந்த அணியை நேரில் வரவழைத்து பிரதமர் மோடி கெளரவித்தார்.
கோடைகால ஒலிம்பிக், குளிர்கால ஒலிம்பிக், மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் நடத்தப்படுகிறது. இதேபோன்று டெஃப்லிம்பிக்ஸ் (Deaflympics) எனப்படும் காது கேளாதோருக்கான விளையாட்டுப் போட்டிகள் சர்வதேச அளவில் நடத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறையும் இந்த விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மே 1 முதல் மே 15 ம் தேதி வரை பிரேசிலில் நடைபெற்ற இந்தப் போட்டியில் மொத்தம் 11 விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் 5 விளையாட்டுப் போட்டிகளில் இருந்து 16 பதக்கங்களை இந்திய வீரர்களும், வீராங்கனைகளும் வென்றனர்.
1924ம் ஆண்டு முதல் நடைபெற்றுவரும் டெஃப்லிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளில் இத்தனை பதக்கங்களை இந்தியா வெல்வது இதுவே முதல் முறையாகும். அதிகபட்சமாக துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இருந்து இந்திய அணி மொத்தம் 3 தங்கப் பதக்கங்களையும், இரண்டு வெண்கலப் பதக்கங்களையும் வென்றன. பதக்கப் பட்டியலில் இந்திய அணி 9வது இடத்தைப் பிடித்தது. தனுஷ் ஸ்ரீகாந்த், செளர்யா சைனி ஆகியோர் 2 தங்கம் வென்று பதக்க வேட்டையைத் தொடங்கினர். இந்திய அணி இத்தனை பதக்கங்களை வென்றது இதுவே முதல் முறையாகும். இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை பிரதமர் மோடி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.







