இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நடிகர் விஜய் படத்துக்கு 18 ஆண்டுகளுக்கு பிறகு இசை அமைக்கவுள்ளார்.
நடிகர் யுவன் சங்கர் ராஜா தமிழ் திரையுலகில் முன்னணி இசை அமைப்பாளராக உள்ளார். இவர் சமீபத்தில் திரைத்துறையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்தார்.
பருத்திவீரன், சர்வம், தீபாவளி, பையா உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார். அவரது பாடல்கள் இளைஞர்களை பெரிதும் கவரும் வகையில் இருக்கும். கடந்த 2003ம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான புதிய கீதை படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். அதன் பிறகு, அவர் படத்துக்கு யுவன் இசை அமைக்கவே இல்லை. இருவரும் இணைந்து ஒரு படத்திலாவது பணியாற்ற வேண்டும் என்பது இருவரது ரசிகர்களின் நீண்ட கால விருப்பமாக இருந்து வந்தது.
இந்நிலையில், அவர்கள் இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சந்தித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து அவர்கள் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றவுள்ளனர் என்று யூகங்கள் வெளியாகின. இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற விருது நிகழ்ச்சியொன்றில் நடிகர் விஜய் படத்தில் அவர் இணைந்து பணியாற்றவுள்ளதை உறுதி செய்தார். யுவனின் அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற ‘அந்தக் கண்ண பாத்தாக்கா’ என்ற பாடலை யுவன் சங்கர் ராஜா பாடியிருந்தார். மாஸ்டர் படத்துக்கு அனிருத் இசை அமைத்திருந்தார். விஜய் நடிப்பில் தயாராகி வரும் அடுத்த இரண்டு படங்களுக்கு தமனும், அனிருத்தும் இசை அமைக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இதனால், இந்தப் படங்களுக்கு பிறகே யுவனுடன் அவர் கூட்டணி சேர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.








