டேனிஷ் சித்திக் – மூடிய சாமானியர்களுக்கான கேமராவின் கண்கள்

தீவிரவாதிகளைத் தேடி, ராணுவ வீரர்களுடன் ராணுவ வாகனத்தில் நாம் சென்று கொண்டிருக்கும்போது, துப்பாக்கி குண்டுகள் அந்த வாகனத்தைத் துளைத்தால்? அதிர்ந்துவிடுவோம் அல்லவா? ஆனால், உண்மையிலேயே ஆஃபகானிஸ்தானில் இப்படி ஒரு சவாலான பயணத்தில் ராணுவ வீரர்களுடன்…

தீவிரவாதிகளைத் தேடி, ராணுவ வீரர்களுடன் ராணுவ வாகனத்தில் நாம் சென்று கொண்டிருக்கும்போது, துப்பாக்கி குண்டுகள் அந்த வாகனத்தைத் துளைத்தால்? அதிர்ந்துவிடுவோம் அல்லவா? ஆனால், உண்மையிலேயே ஆஃபகானிஸ்தானில் இப்படி ஒரு சவாலான பயணத்தில் ராணுவ வீரர்களுடன் கேமராவுடன் பயணித்தவர் தான் டேனிஷ் சித்திக்.

மும்பையில் பிறந்த டேனிஷ் சித்திக், Mass Communication-பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றவர். இந்தியாவின் முன்னணி செய்தி தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் நிருபராக இருந்த டேனிஷ் சித்திக்க்கிற்கு, போட்டோ ஜர்னலிசத்தின் மீது தீராத ஆர்வம்.

ஒரு புகைப்பட பத்திரிகையாளராக, ஆசியா, ஐரோப்பா என முக்கிய நிகழ்வுகளை படம்பிடித்தவர், பல நாடுகளில் மக்கள் படும் இன்னல்களை புகைப்படத்தின் மூலம் உலகுக்கு வெளிப்படுத்தினார். ஆப்கானிஸ்தான், ஈராக் போர்கள், ரோஹிங்கியா பிரச்னை, ஹாங்காங் ஆர்ப்பாட்ட, நேபாள பூகம்ப, வடகொரியா விளையாட்டுப் போட்டி என இவர் பதிவு செய்தவை சரித்திரப் பக்கங்களில் சாட்சியாக இருக்கின்றன.

நேஷனல் ஜியாகரஃபி, நியூயார்க் டைம்ஸ், ஃபோர்ப்ஸ் என இவர் எடுத்த புகைப்படங்கள் சர்வதேச பத்திரிகைகளை அலங்கரிக்க, இந்தியா மட்டுமல்லாது, அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா உள்ளிட்ட நாடுகளில் சிறந்த புகைப்பட பத்திரிகையாளருக்கான விருதுகளையும் பெற்றுள்ளார்.

மியான்மாரில் ரோஹிங்கியா சமூக மக்கள் படும் இன்னலை ஆவணப்படுத்தியதற்காக, 2018ம் ஆண்டின் சிறந்த புகைப்படக் கலைஞருக்கான புலிட்சர் விருது வழங்கப்பட்டது. புகைப்படக் கலையின் மீது கொண்ட தீரா பற்றால் காடு, மலை என சுற்றித்திரிந்து மக்களின் இன்னல்களைப் படம்பிடித்த டேனிஷுக்கு ஆப்கானிஸ்தான் கடைசி பயணமாக இருக்கும் என்று அவர் அறிந்திருக்கவில்லை.

இந்த நிலையில் தான், ஆப்கனில் தாலிபான் தீவிரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே நடைபெறும் மோதலை படம்பிடிக்க ஆப்கனுக்கு அனுப்பிவைக்கப்பட்டார் டேனிஷ் சித்திக்.காந்தஹார் நகரின் ஸ்பின் போல்டாக் மாவட்டத்தில், ஆஃப்கன் சிறப்புப் படைகளுடன் டேனிஷும் சென்று கொண்டிருந்த போது தான், தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் சம்பவ இடத்திலேயே குண்டடி பட்டு உயிரிழந்தார் டேனிஷ் சித்திக்.

மோதலைப் புகைப்படம் எடுக்கத் தயாரான கேமராவின் கண்கள் திறந்தே இருக்க, கனவுகளுடன் பயணித்த டேனிஷின் கண்கள் இறுதியாய் மூடின. ஜூலை 13ஆம் தேதி நடந்த தாக்குதலில், “அதிர்ஷ்டவசமாக நான் தப்பித்து விட்டேன்” என அவர் ட்விட்டரில் பதிவிட்ட மூன்றே நாளில் இந்த துயர சம்பவம் அரங்கேறியது உலக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

”ஒரு புகைப்படம் மக்கள் கவனத்தை ஈர்ப்பது மட்டுமல்லாமல், அதன் முழு கதையையும் சொல்ல வேண்டும். மக்களின் வாழ்வு நிலையை படம்பிடித்துக் காட்டும் முன், அவர்களோடு சேர்ந்து நாமும் அவர்கள் வாழ்வை வாழ்ந்து பார்க்க வேண்டும்”. இதுவே மற்ற புகைப்பட கலைஞர்களுக்கு டேனிஷ் விட்டுச் சென்ற வார்த்தைகள். அப்படி, நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் பிணங்கள் கொத்துக்கொத்தாக எரிக்கப்பட்ட படத்தை எடுத்து வெளியிட்டு உலகின் கவனத்தை ஈர்த்த அந்த புகைப்படக்காரர் டேனிஷ் சித்திக் தான். ஊரடங்கில் நடந்தே சென்ற மக்கள், விவசாயிகள் போராட்டம், என இணையத்தில் நாம் காணும் பிரபலமான பல புகைப்படங்களுக்குச் சொந்தக்காரர் அவர்.

எத்தனை நெருக்கடி வந்தாலும், அதனை சவாலாக எடுத்து பணி செய்வதே சிறந்த பத்திரிகையாளரின் பணி என்பதை தன் வாழ்வின் மூலம் உணர்த்தியிருக்கிறார் டேனிஷ் சித்திக்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.