கேரளாவில், வரதட்சணை வாங்க மாட்டோம், கொடுக்க மாட்டோம் என்று கல்லூரி மாணவர்களிடம் கையெழுத்து பெறக்கோரி அம்மாநில ஆளுநர், பல்கலைக்கழக துணை வேந்தர்களிடம் அறிவுறுத்தினார்.
கேரளாவில், சுசித்ரா (19 வயது), சுனிதா (24 வயது), விஸ்மையா (24 வயது), இப்படி அடுத்தடுத்து 25 வயதிற்கும் கீழ் உள்ள இளம்பெண்கள் திருமணம் செய்து கொண்ட பின் வரதட்சணைக் கொடுமையில் பலியாகியுள்ளது, அம்மாநிலத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்புக் கேள்விக் குறியாக உள்ளது எனக் கூறி ஆளும் பின்ராயி விஜயனின் இடதுசாரி கட்சியைக் கண்டித்து, ஆளுநர் ஆரிப் முகமது, கடந்த புதன்கிழமை அன்று, ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். இதற்கு அம்மாநிலத்தின் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

இந்நிலையில், திருமணம் செய்துகொள்ளும் பெண்களுக்கு நீங்காத துயரத்தை ஏற்படுத்தும் இந்த வரதட்சணைக் கொடுமையைக் களையும் நோக்கில், ஆளுநர் ஆரிப் முகமது, மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை அழைத்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
அதில், கல்லூரிகளில் படிக்க வரும் இளைஞர்கள் அனைவரும் தங்கள் பட்டப்படிப்பு சான்றிதழ் பெறுவதற்கு முன்பு, தாங்கள் யாரும் வரதட்சணைக் கொடுக்கவோ கேட்கவோ மாட்டோம் என்று கையெழுத்திட்ட ஒப்புதலை பெறலாம் என துணை வேந்தர்களுக்கு ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.






