புலிட்சர் விருது பெற்ற இந்திய புகைப்பட பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் மரணத்தில் தங்கள் பங்கு எதுவும் இல்லை என தாலிபான் அமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவை சேர்ந்த டேனிஷ் சித்திக் ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்தில் தலைமை புகைப்பட நிருபராக பணியாற்றி வந்தார். ரோஹிங்கியாக்களின் துயர வாழ்வை பதிவு செய்ததற்காக இவர் புலிட்சர் விருது பெற்றவர். மேலும் கொரோனா இரண்டவது அலையின்போது கங்கை நதிக்கரையில் பிணங்கள் எரிக்கப்படுவது குறித்து இவர் எடுத்த புகைப்படங்கள், கொரோனாவின் உண்மை நிலையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் உள்ள காந்தஹர் பகுதியில், தாலிபான் தீவிரவாதிகளை எதிரான தாக்குதலில் ஈடுபட்டுள்ள ஆப்கான் சிறப்புப் படைகளுடன் டேனிஷ் சித்திக் உடன் சென்றிருந்தார். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் டேனிஷ் தலிபான்களால் சுற்றுக் கொள்ளபட்டதாக அறிவிக்கபட்டது. இந்நிலையில் புகைப்பட பத்திரிகையாளர் டேனிஷ் சித்திகின் மரணத்தில் தங்கள் பங்கு எதுவும் இல்லை என தாலிபான் அமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.
மேலும் இது குறித்து தாலிபான் செய்தி தொடர்பாளர் ஸபியுல்லா முஜாஹித் கூறுகையில், இரு தரப்பினரும் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் அவர் எப்படி இறந்தார் என்று தங்களுக்கு தெரியாது என தெரிவித்துள்ளார். மேலும், போர்க்களத்திற்கு வரும் பத்திக்கையாளர்கள் தங்களிடம் முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், அவ்வாறு தெரிவித்தால் அவர்களை பத்திரமாக பார்த்துக் கொள்வோம் எனவும் தெரிவித்தார்.’







