ஜூன் 28ம் தேதியுடன் தமிழகத்தில் பொது முடக்கம் முடிவடைய உள்ள நிலையில், ஜூலை 5ம் தேதி வரை கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை என வகை 1ல் குறிப்பிடப்பட்டுள்ள 11 மாவட்டங்களில் கடைகள் மற்றும் இதர செயல்பாடுகளுக்கு இரவு 7 மணி வரை அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்படவும், மின்சாதன பொருட்கள் விற்பனை கடைகள், ஹார்டுவேர் கடைகள், புத்தகக்கடைகள், பாத்திர விற்பனை கடைகள், செல்போன், போட்டோ கடைகள், கணினி வன்/மென் பொருள் விற்பனை கடைகள், கட்டுமான பொருட்கள் விற்பனை கடைகள் உள்ளிட்ட கடைகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 7 மணிவரை செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
சார் பதிவாளர் அலுவலகங்கள் 100% பணியாளர்களுடனும், அனைத்து தனியார் நிறுவனங்கள் 50% பணியாளர்களுடனும், வங்கி, காப்பீட்டு சேவை நிறுவனங்கள் 50 சதவிகித பணியாளர்களுடனும், ஏற்றுமதி இறக்குமதிக்கு தேவையான இடுபொருட்களை வழங்கும் நிறுவனங்கள் 100% நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன் செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இதர தொழிற்சாலைகள் 33% பணியாளர்களுடனும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 20% பணியாளர்களுடனும், வீட்டு வசதி நிறுவனங்கள் 33% பணியாளர்களுடனும் செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அனைத்து வகையான கட்டுமான பணிகளும் அனுமதிக்கப்படுவதாகவும், பூங்காக்கள் காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை செயல்படவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

சலூன்கள், அழகு நிலையங்கள் 50% வாடிக்கையாளர்களுடன் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதே போல பள்ளி கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பான பணிகள் அனுமதிக்கப்படுவதாகவும், திறந்த வெளியில் திரைப்படம் மற்றும் சின்னதிரை படப்பிடிப்பு கலைஞர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட 100 பேர் மட்டுமே RTPCR பரிசோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மேற்குறிப்பிட்ட 11 மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.