கடலூர்: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு செல்வப்பெருந்தகை இரங்கல்!

ரயில் விபத்துகள் மீண்டும் நடைபெறாமல் இருக்க மத்திய அரசு மற்றும் ரயில்வே துறை உடனடியாக நடவடிக்கை என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கடலூர் அருகே செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் பள்ளிக் குழந்தைகள் இருவர் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

பொதுமக்கள் தினமும் கடக்கும் ரயில்வே வழிகளில் பாதுகாப்பு இல்லாமல் இருப்பது மிகவும் வருத்தத்திற்குறியது. மக்கள் எங்கு அதிகம் செல்கிறார்களோ அந்த இடங்களில் பாதுகாப்பும், எச்சரிக்கையும் கட்டாயம் இருக்க வேண்டும். இத்தகைய துயரங்களுக்கு ரயில்வே துறை முழு பொறுப்பு ஏற்க வேண்டும். மத்திய ரயில்வே அமைச்சர் நேரடியாக இச்சம்பவத்தைக் கவனித்து, பாதுகாப்பு குறைபாடுகளை உடனடியாக சரி செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாட்டு மக்களின் உயிர்களை பாதுகாப்பது தான் ஒர் அரசின் முதல் கடமையாகும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடும் காயமடைந்தவர்களுக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சையும் பெற மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது போன்ற விபத்துகள் மீண்டும் நடைபெறாமல் இருக்க மத்திய அரசு மற்றும் ரயில்வே துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து மக்களின் பாதுகாப்பு முறைகளை உறுதி செய்திட வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.