கொரோனா தொற்று பரவல் காரணமாக மத்திய பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான பொது நுழைவுத்தேர்வு (CUCET) இந்த ஆண்டு நடத்தப்படாது என்றும், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை பழைய முறைப்படியே நடக்கும் என்று பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்துள்ளது.
மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சேருவதற்கு 2021-22ம் கல்வி ஆண்டு முதல் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்று பல்கலைக்கழக மானியக்குழு கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்திருந்தது. அதன்படி நாடு முழுவதும் உள்ள 41 மத்திய பல்கலைக்கழகங்களுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்றும் கூறப்பட்டது.
பொது நுழைவுத் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் இன்று பல்கலைக்கழக மானிய குழு வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில், மத்திய பல்கலைக்கழகங்களில் 2021-22ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையானது பழைய முறைப்படியே நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. அதன் படி அந்தந்த மத்திய பல்கலைக்கழகங்கள் சார்பில் ஆன்லைன் வாயிலாகவும், நேரிலும் மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது.
2022-23ம் கல்வி ஆண்டில் இருந்து பொது நுழைவுத்தேர்வின் படி மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று யுசிஜி கூறியுள்ளது. கடந்த கல்வி ஆண்டில் 14 மத்திய பல்கலைக்கழகங்களுக்கு மட்டும் பொது நுழைவு தேர்வு நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது.
மத்திய பல்கலைக்கழகங்களில் சேருவதற்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் பட்சத்தில் கிராம்பபுற மாணவர்கள், சமுதாயத்தின் பின்தங்கிய பகுதிகளில் இருக்கும் மாணவர்கள் உயர் கல்வி படிப்பது சிக்கலாகும் என்று கல்வியாளர்கள் கருதுகின்றனர். இதனால், பொது நுழைவுத்தேர்வு முறையை கைவிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.







