பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரின் 8வது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணியில், கேப்டன் கே.எல்.ராகுல், கிறிஸ் கெய்ல், மயங்க் அகர்வால் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். பஞ்சாப் அணியை சரிவில் இருந்து மீட்க போராடிய தமிழக வீரர் ஷாருக்கான் 36 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க எண்களிலேயே நடையை கட்டியதால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பஞ்சாப் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்கள் மட்டுமே எடுத்தது.
சென்னை அணியில் சிறப்பாக பந்துவீசிய தீபக் சாஹர் 4 ஓவர்களில் 13 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். இதையடுத்து, 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களான ருத்துராஜ் கெய்க்வாட், டு பிளிசிஸ் ஆகியோர் களமிறங்கினர். ருத்துராஜ் கெய்க்வாட் 5 ரன்னில் வெளியேற, அடுத்து வந்த மொயீன் அலி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதனால் ரன்களின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது. டு பிளிசிஸ் ஆட்டமிழக்காமல் 36 ரன்கள் அடித்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து, நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் வெற்றியை பதிவு செய்தது.







