பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ், காப்பீட்டுக் கட்டணத்தில் ஒன்றிய அரசின் பங்களிப்பை முன்பிருந்தபடி திரும்ப மாற்றியமைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக, பிரதமருக்கும், ஒன்றிய வேளாண்மைத் துறை அமைச்சருக்கும் முதலமைச்சர் கடிதம் எழுதி உள்ளார். அதில், விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும் முக்கிய திட்டங்களில் ஒன்றான பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தினை தமிழ்நாடு அரசு வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், காப்பீட்டுக் கட்டண மானியத்தில் ஒன்றிய அரசின் பங்கினை 49 விழுக்காட்டிலிருந்து, பாசனப் பகுதிகளுக்கு 25 விழுக்காடாகவும், மானாவாரி பகுதிகளுக்கு 30 விழுக்காடாகவும் குறைத்து நிர்ணயித்திருப்பதால், 2016-2017 நிதி ஆண்டில் 566 கோடி ரூபாயாக இருந்த மாநில அரசின் பங்கு, 2020-2021 நிதி ஆண்டில், 1,918 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
கொரோனா பெருந்தொற்று உள்ள இந்தக் காலக்கட்டத்தில் மாநில அரசின் நிதிச் சுமை அதிகரித்து வரும் நிலையில், இத்திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்துவது தமிழ்நாடு அரசுக்கு சவாலாகவும், கடினமாகவும் உள்ளதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர், ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை இத்திட்டத்தின் நோக்கத்தையே முடக்கியுள்ளதாகவும் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டு, காப்பீட்டுக் கட்டணத்தில் ஒன்றிய அரசு, மாநில அரசு மற்றும் விவசாயிகளின் பங்கினை முன்பிருந்தபடி மாற்றியமைக்க வேண்டுமென்று முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.








