திமுக ஆட்சியை விமர்சிப்பவர்கள் அரசியல் அமாவாசைகள்-முதலமைச்சர்

திமுக ஆட்சி இன்னும் சில அமாவாசைகளுக்கு மட்டுமே நீடிக்கும் என ஆரூடம் கூறுபவர்கள் அரசியல் அமாவாசைகள் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாடு முழுவதும் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும்…

திமுக ஆட்சி இன்னும் சில அமாவாசைகளுக்கு மட்டுமே நீடிக்கும் என ஆரூடம் கூறுபவர்கள் அரசியல் அமாவாசைகள் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு பிப்.19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் அரசியல் கட்சிகளின் பரப்புரைகள் தீவிரமடைந்துள்ளன.

திமுக சார்ப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக தீவிர பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, மதுரை மாவட்ட மக்களுக்காக காணொலி வாயிலாக இன்று பிரசாரம் மேற்கொண்டார்.

அதில், மதுரையில் விரைவில் ரூ.116 கோடி மதிப்பில் மாபெரும் நூலகம் அமைக்கப்பட உள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். இந்த நூலகம் 8 தளங்கள் கொண்டதாக இருக்கும் என்றும், இது தென் மாவட்ட மக்களின் அறிவாலயமாக திகழும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், மதுரையின் தொழில் வளர்ச்சிக்காக மேலூரில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார். மதுரையை லண்டனாக மாற்றுவோம் என்றும் சிங்கப்பூராக மாற்றுவோம் எனக்கூறி, மதுரையை சீரழித்த ஆட்சி, முந்தைய அதிமுக ஆட்சி என முதலமைச்சர் குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், திமுக ஆட்சி இன்னும் சில அமாவாசைகளுக்கு மட்டுமே நீடிக்கும் என ஆரூடம் கூறுபவர்கள் அரசியல் அமாவாசைகள் என விமர்சித்தார். அதே போல யாரை மிரட்டப் பார்க்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.

மேலும், திமுக ஆட்சிக்கு வந்த உடன், எவ்வித புகாருக்கும் இடம் இன்றி ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.4 ஆயிரம் வழங்கியதாகத் தெரிவித்த அவர், இதேபோல் குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகையாக மாதம்தோறும் ரூ.1,000 அளிக்கும் திட்டமும் விரைவில் செயல்படுத்தப்படும் என்றும் உறுதி கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.