மத்திய அரசின் நலத்திட்ட உதவிகள் முறையாக தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே பாஜக தனித்து போட்டியிடுவதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாநகராட்சி 56வது வார்டில் பாஜக சார்பில் போட்டியிடும் காடேஸ்வரா தங்கராஜை ஆதரித்து செரங்காடு பகுதியில் அண்ணாமலை வாக்கு சேகரித்தார். பொதுமக்கள் மத்தியில் அவர் பேசியதாவது,
“2 கோடி பேருக்கும் மேல் வாக்கு உள்ள உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு கேட்க பயந்து முதல்வர் வெளியில் வராமல் உள்ளார். கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாக்களித்தால் மாநில அரசும் எதுவும் தராது, மத்திய அரசும் எதுவும் தராது.” என அவர் விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “வேட்பாளர் தகுதி வாய்ந்த நபரா என்று பார்க்க வேண்டும். நமக்கான வேலைகளை செய்வாரா என்று பார்க்க வேண்டும். தமிழகத்தில் 8 முனைப்போட்டி நிலவும் நிலையில், குறிப்பாக 3 கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.
மத்திய அரசின் நலத்திட்ட உதவிகள் ஊழல் இல்லாமல் வந்து சேர வேண்டும் என்றுதான் பாஜக தனியாக களம் காண்கிறது. ஸ்மார்ட் சிட்டி ஆரம்பித்த பிறகு கூட இப்போது வரை அனைத்து திட்டங்களும் பாதி அளவில்தான் முடிக்கப்பட்டுள்ளது. 30% கமிஷன் என்ற முறையை மாற்றியமைக்கவே பாஜக தனித்து நிற்கிறது.” என்று தனது பரப்புரையில் அண்ணாமலை கூறினார்.
மேலும், “திமுகவின் 8 மாத ஆட்சி 8 வருட ஆட்சி போல சலிப்பு தட்டியுள்ளது. பொங்கல் தொகுப்பு யாரும் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. கெமிக்கல் போட்ட வடமாநில பகுதியில் இருந்து வாங்கப்பட்ட வெல்லத்தை நமக்கு கொடுத்துள்ளார்கள். பொங்கல் தொகுப்பில் வாங்கிய மஞ்சள் பையின் விலை ரூ.60. அதில் ரூ.50 கமிஷன். மஞ்சள் பை , கரும்பு என அனைத்திலும் திமுக அரசு ஊழல் செய்துள்ளது.” என்று விமர்சித்தார்.








