ராணிப்பேட்டை அருகே கடன் தொல்லையால் மகனுடன் தாய், தந்தையும் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பகுதியில் கல்லூரி பேராசிரியர் ராமலிங்கம் என்பவர் அவரது மனைவி அனுராதா மற்றும் இளையமகன் பரத்துடன் வசித்து வந்துள்ளார். ராமலிங்கத்திற்கு அதிகப்படியான கடன்தொல்லை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பெங்களூரில் வேலை செய்து வந்த மூத்த மகன் விஷ்ணு, தந்தையை தொலைபேசி வாயிலாக அழைத்துள்ளார். நீண்ட நேரமாகியும் வீட்டிலுள்ள யாரும் தொலைபேசி அழைப்பை எடுக்காததால் உறவினருக்குத் தகவல் அளித்துள்ளார்.
இதையடுத்து, வீட்டிற்கு உறவினர் வந்து பார்த்த போது, ராமலிங்கம் அவரது மனைவி மற்றும் மகன் தூக்கில் தொங்கியபடி சடலமாகக் கிடந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மூன்று சடலங்களையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் மூவரும் கடன் தொல்லை காரணமாக உயிரை மாய்த்துக் கொண்டது தெரியவந்துள்ளது.








