மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சமூகநீதிக்கான பங்களிப்பு சாதாரண மக்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியதாக கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இதனையடுத்து சென்னை அண்ணா சாலை ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலையில் இருந்து தொடங்கிய அமைதிப் பேரணி சென்னை மெரினா நினைவிடத்தில் உள்ள கருணாநிதி நினைவிடம் வரை நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைதிப்பேரணியில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் திரளான திமுகவினர் பங்கேற்றனர்.
இந்நிலையில், கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “முன்னாள் முதலமைச்சரும், மக்கள் செல்வாக்குமிக்க தலைவருமான கருணாநிதியின் 5ம் ஆண்டு நினைவு நாளில் அவரை நினைவுகூர்கிறேன். சமூகநீதிக்கான அவரது பங்களிப்பு ஏழை, எளிய மற்றும் சாதாரண மக்களின் வாழ்க்கையில் பிரதிபலித்தது. இதன் காரணமாக அந்த மக்களின் இதயங்களில் அவர் என்றும் உள்ளார்” என குறிப்பிட்டுள்ளார்.





