மகாராஷ்டிராவில் மேம்பால பணியின்போது கிரேன் சரிந்து விபத்து – தொழிலாளர்கள் 16 பேர் உயிரிழந்த சோகம்….

மகாராஷ்டிராவில் மேம்பால பணியின்போது கிரேன் சரிந்து விழுந்ததில் 16 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், மும்பை – நாக்பூரை இணைக்கும் வகையில் விரைவு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.…

மகாராஷ்டிராவில் மேம்பால பணியின்போது கிரேன் சரிந்து விழுந்ததில் 16 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை – நாக்பூரை இணைக்கும் வகையில் விரைவு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தானே மாவட்டத்தின் ஷகல்பூர் பகுதியில் 3ஆம் கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மேம்பாலத்தின் பாகங்களை தூக்கி வைக்க ராட்சத கிரேன் எந்திரம் பயன்படுத்தப்பட்டது. அதிகாலை தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென கிரேன் எந்திரம் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 16 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். படுகாயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. விபத்து நடந்த பகுதியில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்து குறித்து நேரில் பார்த்த ஒருவர் கூறும் பொழுது “கிரேன் இயந்திரம் சரிந்து விழுந்தபோது நாங்கள் மறுபுறம் வேலை செய்து கொண்டிருந்தோம். இந்த சம்பவம் நடந்த நேரத்தில் சுமார் 30 பேர் அங்கு வேலை செய்து கொண்டிருந்தனர் என்று தெரிவித்தார். இந்த சம்பவம் நேற்று இரவு 11 மணியளவில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.