கங்கைகொண்டான் அருகே உள்ள கிராமத்தில் சிறுவனின் தலையில் சில்வர் பாத்திரம் மாட்டிக் கொண்டதையடுத்து, தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் அருகே அணைத்தலையூர் கிராமத்தை சேர்ந்தவர் மிக்கேல் ராஜ். இவருக்கு சேவியர் என நான்கு வயதில் மகன் உள்ளார். நேற்று இரவு வீட்டில் உள்ள பாத்திரங்களை வைத்து சேவியர் விளையாடிக் கொண்டிருந்தான். அந்த சமயத்தில் சில்வர் பாத்திரம் ஒன்றை எடுத்து அவரது தலையில் மாட்டியுள்ளான். ஆனால் அந்த பாத்திரம் சிறுவன் தலையில் வசமாக சிக்கிக் கொண்டது.
பாத்திரத்தை எடுக்க பலகட்ட போராட்டம். அதனை சிறுவன் எடுக்க முயற்சி செய்தபோது அவனால் அதனை எடுக்க முடியவில்லை. இதனால் சேவியர் அழத் தொடங்கிய நிலையில் அவனது பெற்றோர் அதனை எடுக்க முயற்சி செய்தனர். அவர்களும் கடுமையாக முயற்சி செய்தும் முடியவில்லை.
அக்கம் பக்கத்தினர் முதற்கொண்டு அனைவரும் முயற்சி செய்தும் பாத்திரத்தை தலையில் இருந்து எடுக்க முடியாததால் உடனடியாக அவர் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கிருந்து மருத்துவர்கள் தகவல் கொடுத்ததன் பெயரில் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். அவர்கள் தங்கள் கொண்டு வந்த பிரத்யேக கருவிகளை கொண்டு சிறுவனின் தலையில் சிக்கியிருந்த எவர்சில்வர் பாத்திரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். அதன் பின்னர் அந்த சிறுவனுக்கு மருத்துவமனையில் கூடுதல் சிகிச்சைகள் வழங்கப்பட்டது.







