ராணுவ டேங்க் தயாரிக்கும் பாதுகாப்புத்துறை தொடர்பான தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் வேலை நிறுத்தம் செய்ய தடைவிதிக்கும் அவசர சட்டத்தை உடனே வாபஸ் பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
அத்தியாவசிய பாதுகாப்புத்துறை சேவைகள் அவசர சட்டம் 2021 என்ற அவசர சட்டத்தை கடந்த ஜூன் 30ம் தேதி மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இந்த அவசர சட்டத்தின் கீழ், ராணுவ உற்பத்தி மற்றும் பழுது நீக்குதல், ராணுவம் தொடர்பாக உற்பத்தி பொருட்களை நிர்வகித்தல் ஆகியவை தொடர்பான தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் வேலை நிறுத்தம் செய்வது தடை செய்யப்படுகிறது.
சட்டத்தை மீறி வேலை நிறுத்தம் செய்வோர் எந்த வித விசாரணைக்கும் உட்படுத்தப்படாமல் வேலையில் இருந்து நீக்கப்படுவர். வேலை நிறுத்த த்தை தூண்டுவோர் மீது இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கவும், அதிகபட்சமாக ரூ.15000 அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது. வேலை நிறுத்தம் செய்ததாக சந்தேகப்படுவதற்கான காரணங்கள் கொண்ட நபரை எந்த வித வாரண்டும் இல்லாமல் போலீஸ் கைது செய்து நடவடிக்கை எடுக்கவும் இந்த சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த சட்டத்தை உடனடியாகத்திரும்ப ப்பெறும்படி கேரள மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்குத்தேர்வு செய்யப்பட்ட மார்க்சிஸ்ட் எம்பி இளமாறம் கரீம் கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங்குக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் மத்திய பாதுகாப்புத்துறை கொண்டுவந்துள்ள அவசர சட்டமானது, சர்வதேச தொழிலாளர் அமைப்பின் விதிமுறைகளை ஏற்றுக் கொண்ட இந்தியாவின் கொள்கைகளுக்கு எதிரானது என்று குறிப்பிட்டுள்ளார்.
ராணுவ தொழிற்சாலை வாரியத்தை கார்ப்பரேட் மயமாக்குவதைக் கண்டித்து வரும் 26ம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என 76,000த்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் அந்த போராட்டத்தை ஒடுக்குவதற்காக இந்த அவசர சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.







