மறு உத்தரவு வரும் வரை ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் சமீப நாட்களாக நாள்தோறும் 15 ஆயிரத்தைக் கடந்து பதிவாகி வருகிறது. கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காக இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு ஊரடங்கு என தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. அதுபோலவே திரையரங்குகள், வணிக வளாகங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், சலூன் உள்ளிட்டவையும் இயங்க அனுமதி மறுக்கப்பட்டது.
ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு என்பதால் சனிக்கிழமை இறைச்சி உள்ளிட்ட கடைகளில் அதிக கூட்டம் கூடியது. இதனால் சனிக் கிழமை இறைச்சிக் கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டது. அத்துடன், 3,000 சதுர அடிக்கு அதிகமான கடைகளை மூடவும் அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிலையில் மருத்துவக் குழுவினர் மற்றும் கொரோனா அதிகமாக பரவும் 6 மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று ஆலோசனை மேற்கொண்டார். தற்போதைய கட்டுப்பாடுகள் ஏப்ரல் 30ஆம் தேதியுடன் முடிவதால், மே மாதத்துக்கான கட்டுப்பாடுகள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், தற்போது அமலில் உள்ள அனைத்துக் கட்டுப்பாடுகளும் மறு உத்தரவு வரும் வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், மே 2ஆம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை கருத்தில் கொண்டு வேட்பாளர்கள், முகவர்கள் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் அதிகாரப்பூர்வ பிரதிநிதிகளுக்கு அன்றைய தினம் மட்டும் கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.







