கொரோனா தொற்று பரவல் தற்போது அதிகரித்துள்ள நிலையில், நாசி வழியாக எடுத்துக்கொள்ளும் கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தற்போது 4 மாதங்களுக்கு பின்னர் இந்த தொற்று பாதிப்பானது 13,000ஐ கடந்துள்ளது. நேற்றைய நிலவரத்தை பொறுத்த அளவில், 13,216 பேர் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனால் மொத்த பாதிப்பானது 4.32 கோடியாக அதகரித்துள்ளது. தற்போது 72,474 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகப்பட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 1,079 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல மொத்த உயிரிழப்பு 5,24,855 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணியை மாநில அரசுகள் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகின்றன.
இப்படியான சூழலில், மூக்கு வழியாக தொற்றுக்கு எதிரான பயன்படுத்தப்படும் தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோவாக்சின் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான பாரத் பயோடெக், நாசி வழி எடுத்துக்கொள்ளும் தடுப்பூசிக்கான ஆய்வக பரிசோதனையை முடித்துள்ளதாக அறிவித்துள்ளது.
மூன்று கட்டமாக நடத்தப்படும் இந்த ஆய்வக பரிசோதனை நிறைவடைந்துள்ளதாகவும், இதற்கான ஆய்வறிக்கைகளை அடுத்த மாதம் மருத்து தர கட்டுப்பாட்டு ஆணையத்திடம் வழங்க உள்ளதாகவும் நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணா எல்லா தெரிவித்துள்ளார். ஆணையம் அனுமதியளித்தால் உலகின் முதல் நாசி வழி தடுப்பூசியை இந்தியா அறிமுகப்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.