உலக நாடுகளுக்கு இடையே கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் கூட சமத்துவமற்ற ஏற்றத்தாழ்வு நிலை நீடித்து வருகிறது.
கொரோனா பெருந்தொற்றை எதிர்த்து உலகமே போராடி வருவதோடு அதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகளிலும் ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். உலகம் முழுக்க தற்போது 212 கொரோனா தடுப்பூசிகள் ஆய்வு நிலையில் வளர்ந்து வருகின்றன. அதில், 48 தடுப்பூசிகள் மட்டும் 3ஆம் கட்ட சோதனையை எட்டியுள்ளது. அவசர தேவைகளுக்காக பயன்படுத்த சில தடுப்பூசிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கொரோனா தடுப்பூசி உற்பத்தியாளர்களிடம் இருந்து அதனை பெறுவதில் பல நாடுகளும் தீவிரம் காட்டி வருகின்றன. இருந்தாலும் அதிக வருமானம் கொண்ட நாடுகளுக்குதான் தடுப்பூசி வாங்குவதில் சாதகமான நிலை இருந்து வருகிறது. 6.4 பில்லியன் வரை ஆர்டர் செய்யப்பட்டுள்ள தடுப்பூசிகளில் 82 சதவிகிதம் வரை உயர் மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கானது.
இந்த நாடுகளில் தனிநபர் வருமானம் சராசரியாக 4046 டாலராக இருக்கிறது. அவை தங்கள் மக்களுக்கான அதிகப்படியான தடுப்பூசிகள் வாங்குகின்றன. குறைந்த மற்றும் குறைந்த நடுத்தர வர்க்க வருமானம் கொண்ட நாடுகள் 20 சதவிகிதத்துக்கும் குறைவான தடுப்பூசிகளையே ஆர்டர் செய்துள்ளது.
195 நாடுகளில் 137 நாடுகள் கொரோனா தடுப்பூசியை ஆர்டர் செய்துள்ளன. அதில், 44 சதவிகிதத்தை 27 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியம் வாங்கவுள்ளது. ஆனால், 55 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஆப்ரிக்க ஒன்றியம் 10 சதவிகித தடுப்பூசிகளையே ஆர்டர் செய்துள்ளது. இதில் ஐரோப்பிய ஒன்றியத்தை ஒப்பிடும்போது ஆப்ரிக்க ஒன்றியத்தின் மக்கள் தொகை இரண்டு மடங்கு அதிகமானது.
இங்குதான் சமத்துவமற்ற முறையும், ஏற்றத்தாழ்வும் நிலவுகிறது. அதாவது, அதிக வருமானம் கொண்ட நாடுகள் தங்கள் மக்கள் தொகையினருக்கு 5 முறை செலுத்துவதற்கான கொரோனா தடுப்பூசிகளை அதிகமாக ஆர்டர் செய்துள்ளன. ஆனால், சில குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் தங்கள் மக்கள் தொகைக்கு பாதி பேருக்கு போடும் அளவிற்கே தடுப்பூசிகளை ஆர்டர் செய்துள்ளன.
கொரோனா தடுப்பூசியை வாங்கினாலும் அதை சேமித்து வைப்பதற்கான குளிர்பதன இடங்கள், மின் வசதிகள், சோதனை வசதிகள் பெரும்பாலான குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் இல்லை. இது ஒருபுறமிருக்க நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு பொருளாதார நெருக்கடிகள் இருப்பதால் சுயமாக கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் அழுத்தத்திற்கு தள்ளப்பட்டன.
தடுப்பூசி விநியோகத்தில் சமத்துவ நடவடிக்கை
உலக சுகாதார மையம் மற்றும் பிற சுகாதார அமைப்புகள் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு உதவுகிறது. தடுப்பூசி மற்றும் நோய் தடுப்பு விவகாரங்களை ஒருங்கிணைக்க உலக அளவில் கோவாக்ஸ் என்னும் அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் சம அளவிலான கொரோனா தடுப்பூசி வழங்கலை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு தற்போது 300 மில்லியன் அளவிலான ஆக்ஸ்போர்டு -ஆஸ்ட்ரோஜென்கா தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன. 2021ஆம் ஆண்டு இறுதிக்குள் 2 பில்லியன் தடுப்பூசிகளை வாங்க 5 பில்லியன் டாலர்கள் நிதி திரட்டப்படவுள்ளது.
இந்த நடவடிக்கைகள் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கான தடுப்பூசிகள் சென்று சேருவதை விரைவுபடுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் தடுப்பூசிகளை கொண்டு செல்வதில் ஏராளமான தளவாட தடைகள் இருப்பதால் பெரும்பாலான குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு முழுமையான கொரோனா தடுப்பூசி பாதுகாப்பைப் பெற 2023 அல்லது 2024 வரை காத்திருக்க வேண்டும்.
தகவல் ஆதாரம்: ஹெல்த் அனலிட்டிக்ஸ் ஆசியா