நாட்டின் முதல் சூரியசக்தி கிராமம்; பிரதமர் அறிவிப்பு

சூரிய ஒளியினால் 24 மணிநேரமும் மின்சாரம் பெறும் இந்தியாவின் முதல் கிராமத்தை பிரதமர் இன்று அறிவித்தார். குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி அங்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக…

சூரிய ஒளியினால் 24 மணிநேரமும் மின்சாரம் பெறும் இந்தியாவின் முதல் கிராமத்தை பிரதமர் இன்று அறிவித்தார்.

குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி அங்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக மோதேரா கிராமத்தில் சூரிய சக்தி திட்டத்தை திறந்து வைத்து, அக்கிராமத்தை இந்தியாவின் முதல் சூரிய சக்தி கிராமமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், “மோதேரா இப்போது சூரியகிராமம் என்று அழைக்கப்படும். மோதேராவில் உள்ள மக்கள் சூரிய சக்தியைப் பயன்படுத்திய பிறகு மின்சாரக் கட்டணத்தில் 60 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை சேமிப்பார்கள். இப்போது பொதுமக்கள் தங்கள் சொந்த மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். இனி நாம் மின்சாரத்திற்கு பணம் செலுத்த மாட்டோம், ஆனால் அதை விற்று அதிலிருந்து சம்பாதிக்கலாம்” என்று பேசினார்.

இதுகுறித்து குஜராத் அரசு வெளியிட்ட பதிவில், மோதேரா கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அந்த கிராம மக்களுக்கு இலவசமாக சூரிய ஒளி மின்சாரம் வழங்கப்படும். இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை அதிகரிக்கும் பிரதமரின் திட்டத்தை முன்னெடுக்கும் விதமாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

மோதேராவில் உள்ள சூரிய கோவிலுக்கு 3-டி தொழில்நுட்ப வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சூரிய சக்தியில் இயங்கும் இந்த 3-டி திட்டத்தை பிரதமர் மோடி இன்று அர்ப்பணித்தார். இதன் மூலம் சூரிய கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அதன் வரலாற்றை அறிய உதவும். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, கோவில் வளாகத்தில் பாரம்பரிய விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக குஜராத் அரசு 12 ஹெக்டேர் நிலத்தை ஒதுக்கியது. இத்திட்டத்தின் வளர்ச்சிக்காக ரூ.80.66 கோடி செலவிடப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.