கள்ளநோட்டு விவகாரம் – விசிக நிர்வாகி அதிரடி நீக்கம்!

கள்ளநோட்டு அச்சடித்த விவகாரத்தில் விசிக நிர்வாகி செல்வம் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த அதர்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் (39). இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மேற்கு மாவட்ட பொருளாளராக இருந்து வந்தார். இவர் விவசாய விளை நிலத்தில் ஷெட் அமைத்து கள்ளநோட்டு அச்சடித்து வந்ததாக ராமநத்தம் காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் உடனடியாக இன்று காலை சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதனை அறிந்த கும்பல் தலைமறைவானதாக தெரிகிறது.

இதற்கிடையே, போலீசார் அங்கு நடத்திய தீவிர சோதனையில் ரூ.85 ஆயிரம் மதிப்பில் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், வாக்கி டாக்கி, லேப்டாப், ஏர்கன், பிஸ்டல் ஏர்கன், கவுண்டிங் மெஷின்,
பிரிண்டிங் மெஷின், பேப்பர் பண்டல், போலீஸ் யூனிபார்ம், ஆர்பிஐ முத்திரை
உள்ளிட்ட பொருள்களும் போலீசாரால் கைப்பற்றப்பட்டது. தப்பி ஓடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

கள்ளநோட்டு அச்சடித்த விவகாரத்தில் கடலூர் மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் செல்வத்திற்கு தொடர்பு இருப்பதாக வந்த செய்தியை அடுத்து அக்கட்சியின் மாவட்ட செயலாளர் திராவிட மணி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மாவட்ட பொருளாளராக செயல்பட்டு வந்த செல்வம் என்பவரை கட்சியின் மாவட்ட பொருளாளர் பதவியில் இருந்தும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நிரந்தரமாக நீக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.