படப்பை அருகே பொறியியல் கல்லூரி மாணவர்கள் மாங்கொட்டையில் இருந்து தயாரிக்கும் அழகு சாதனப் பொருட்களை சர்வதேச அளவில் சந்தைப்படுத்த பொறியியல் கல்லூரியும், மலேசியா பல்கலைக்கழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தானிஷ் அகமது என்ற தனியார்
பொறியியல் கல்லூரியில் பயிலும் கெமிக்கல்ஸ் இன்ஜினியரிங் மாணவ, மாணவியர் 6
மாதங்கள் சோதனை மேற்கொண்டதில் இந்தியாவில் கிடைக்கும் மாம்பழத்தின் கொட்டையில் இருந்து எண்ணெய் எடுத்து அதன் மூலம் அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்க முடியும் என கண்டுபிடித்துள்ளனர்.
இந்நிலையில், மலேசியாவில் உள்ள யுனிவர்சிட்டி ஆஃப் டெக்னாலஜி மாறா பெர்லஸ்
பல்கலைக்கழகம் தனியார் கல்லூரி மாணவ, மாணவியர் கண்டுபிடிப்புக்கு அங்கீகாரம்
அளித்துள்ளது . அதன்படி, மலேசியாவின் மாறா பெர்லஸ் பல்கலைக்கழகமும், தனியார் பொறியியல் கல்லூரியும் மாங்கொட்டையில் இருந்து அழகு சாதன பொருட்கள் தயாரித்து சர்வதேச அளவில் சந்தைபடுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தனியார் பொறியியல்
கல்லூரியில் நடைபெற்றது.
இதையும் படிக்க: வழக்கறிஞராக இருந்தும் சமூக பொறுப்பு இல்லையா? வடமாநில தொழிலாளர் விவகாரத்தில் முன்ஜாமீன் கோரிய பாஜக நிர்வாகிக்கு நீதிபதி கேள்வி
மலேசியா மாறா பெர்லஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அதிபா நஜ்வானி தனியார்
பொறியியல் கல்லூரிக்கு வந்து பொறியியல் கல்லூரியின் கெமிக்கல்ஸ் இன்ஜினியரிங்
மாணவ, மாணவியர் இடையே கலந்துரையாடினார். அதன் பிறகு தனியார் பொறியியல்
கல்லூரியின் இயக்குநர் பரமசிவன் மற்றும் மாறா பெர்லஸ் பல்கலைக்கழகத்தின்
பேராசிரியர் அதிபா நஜ்வானி ஆகியோர் சந்தைப்படுத்துவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இதன்படி 6 மாதத்தில் இந்த அழகுசாதனப் பொருட்கள் சந்தைப்படுத்தபடும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் மற்றும் பெண்கள் பயனடைவார்கள் என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிகழ்வில், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
-ம.பவித்ரா








