கேரளா, மகாராஷ்டிராவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா

கேரளா, மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது பேட்டியில், “நாடு முழுவதும் தொடர்ச்சியாக கொரோனாவிலிருந்து குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து…

கேரளா, மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது பேட்டியில், “நாடு முழுவதும் தொடர்ச்சியாக கொரோனாவிலிருந்து குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலையில் 50% கொரோனா பாதிப்பானது கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களிலிருந்து பதிவாகியுள்ளது. கேரளாவில் மலப்புரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து காணப்படுகிறது. இன்றைய நிலவரப்படி கேரளாவில் 1,65,834 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது ஒட்டு மொத்த பாதிப்பில் 40.95 சதவீதமாக உள்ளது.” என்று கூறியுள்ளார்.

மேலும், “இதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 78,700 பேரும், கர்நாடகாவில் 24,045 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தேசிய அளவில் அதிகமான நபர்கள் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் மாநிலங்களில் தமிழ்நாடு 5வது இடத்தில் உள்ளது. ஒட்டுமொத்தமாக 44 மாவட்டங்களில் கொரோனா பரவல் விகிதம் அதிகரித்துள்ளது கவலைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்தியாவில் கொரோனா 2வது அலை இன்னும் முடியவில்லை. இன்னமும் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சையில் உள்ளனர் என்பதை அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும்.” என்றும் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர்,

“தமிழகம், கேரளா, கர்நாடகா, இமாச்சல் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், மிசோரம், புதுச்சேரி, லட்சத்தீவுகள் ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. எனவே கொரோனா விதிமுறைகளை கடுமையாக கடைப்பிடிக்க வேண்டும், இல்லை என்றால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது. உலக அளவில் 2வது அலை உருமாற்றம் பெற்ற டெல்லடா வைரசால் அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. உருமாற்றம் பெற்ற டெல்லடா வைரஸ் சில மாநிலங்களில் அதிகரித்து காணப்படுகிறது. எனவே நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கொரோனாவை கட்டுப்படுத்த நமது ஆயுதம் தடுப்பூசி, எனவே தடுப்பூசியை எடுத்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்காக கோவேக்சின் தடுப்பூசி தற்போது பரிசோதனையில் உள்ளது, இறுதி பரிந்துரைக்காக காத்திருக்கிறோம்.” என்றும் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.