சென்னையில் வரும் 3ம் தேதி முதல் வியாபாரிகளுக்கு கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படவுள்ளதாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. இதையடுத்து தமிழ்நாடு அரசு முழுவீச்சில் கொரோனா தடுப்பு பணிகளை துரிதப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அந்த வகையில் சென்னையில் முக்கிய பகுதிகளான தி.நகர் ரெங்கநாதன் தெரு, கொத்தவால்சாவடி உள்பட 9 இடங்களில் உள்ள கடைகள் மூட உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், சென்னை திரு.வி.க.நகர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சாரத்தை அறநிலைய துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு தொடங்கி வைத்தார். தொடர்ந்து, மத்திய சென்னை மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோரும் அமைச்சருடன் இணைந்து, பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங்பேடி, பொதுமக்களிடம் கொரோனா நோய் தடுப்பு விழிப்புணர்வு அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். வரும் 3-ஆம் தேதி முதல் வியாபாரிகளிடமும் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரியும் தொழிலாளர்கள், வியாபாரிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதால், கோயம்பேடு சந்தையை மூடும் சூழல் தற்போதைக்கு இல்லை என தெரிவித்தார்.







