கோரமண்டல் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 301 ஆக உயர்ந்துள்ளது.
கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. இந்த ரயில் மேற்கு வங்காளம், ஒடிசா, ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய நான்கு மாநிலங்களின் இணைக்கும் விதமாக இதன் வழித்தடம் அமைந்துள்ளது.
இந்த நிலையில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் கடந்த 2ம் தேதி மாலை 3:30 வழக்கம் போல மேற்கு வங்க மாநிலம் சாலிமரிலிருந்து புறப்பட்டது. இந்த ரயில் நேற்று மாலை 4:50க்கு சென்னை வந்து சேரும் என எதிர்பார்க்கப்பட்டது.
நேற்று மாலை இந்த ரயில் மேற்கு வங்க மாநிலத்தை கடந்து ஒடிசாவின் பஹனகா ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருக்கும் போது சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின்போது ரயில் நேருக்கு நேர் மோதியதில் ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டன. அப்போது பெங்களூருவில் இருந்து ஹவுரா சென்ற ரயில் தடம்புரண்டு கிடந்த பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளாகியது.
இந்த விபத்தில் 288 உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், நேற்று இரவு மேலும் 13 உடல்கள் கண்டெடுக்கப்பட்டு, இதுவரை 301 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் 200-க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 160-க்கும் மேற்பட்ட உடல்களை அவர்களது உறவினர்களால் துல்லியமாக கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள் : 99% தமிழர்கள் அடையாளம் காணப்பட்டனர் – தமிழ்நாடு அமைச்சர்கள் குழு தகவல்
மேலும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று விபத்து நடந்த பகுதியில் ஆய்வு நடத்த உள்ளதாகவும், காயம் அடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்களின் விவரங்களை TollFree நம்பர் ஆன 1929 என்ற எண்ணை தொடர்பு கொண்டும், எய்ம்ஸ் மருத்துவமனையின் இணையதள முகவரியிலும் தெரிந்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர்கள் இதுவரை உயிரிழந்ததாக தகவல்கள் வரவில்லை என்றும், ரயிலில் பயணித்த பத்துக்கும் மேற்பட்ட தமிழர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், அவர்களின் விவரங்கள் இன்று மாலைக்குள் தெரியவரும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.








