கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகங்களை கலைக்கப் போவதில்லை: தமிழ்நாடு அரசு

கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகங்களை கலைக்கப் போவதில்லை என தமிழ்நாடு அரசு உத்தரவாதம் அளித்துள்ளது. அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, கூட்டுறவு சங்கங்களின் தற்போதைய நிர்வாகத்தை கலைத்து புதிதாக தேர்தல் நடத்துவது…

கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகங்களை கலைக்கப் போவதில்லை என தமிழ்நாடு அரசு உத்தரவாதம் அளித்துள்ளது.

அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, கூட்டுறவு சங்கங்களின் தற்போதைய நிர்வாகத்தை கலைத்து புதிதாக தேர்தல் நடத்துவது குறித்து அரசு கொள்கை முடிவு எடுக்க உள்ளதாக தெரிவித்திருந்தார். ஆனால், பதவிக் காலம் முடியும் முன்பு கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகத்தை கலைத்துவிட்டு, புதிதாக தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டன.

இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் முரளி, விழுப்புரம் இரும்பை கூட்டுறவு சங்கத்தின் தலைவர் சதீஷ்குமார் உள்ளிட்ட 7 பேர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில், “2023ம் ஆண்டு வரை பதவிக்காலம் உள்ள நிலையில், அன்றாட நடவடிக்கைகளில் தலையிடவும், நிர்வாகிகளின் பணியில் இடையூறு செய்யவும் தடை விதிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

இவ்வழக்கு நீதிபதி கிருஷ்ணகுமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகங்களை கலைக்கப் போவதில்லை என தமிழ்நாடு அரசு உத்தரவாதம் அளித்தது. அத்துடன், முறைகேடு நடந்த கூட்டுறவு சங்கங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பு வாதத்தை பதிவுசெய்துகொண்ட நீதிபதி, விசாரணையை ஒத்திவைத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.