ட்ரூ ப்ளூ ஆல்பத்தால் சர்ச்சை – மத உணர்வாளர்களின் எதிர்ப்பை சந்திக்கும் ராப் பாடகி!

ராப் பாடகியான டாமி ஜெனிசிஸ் தனது ட்ரூ ப்ளூ ஆல்பத்தால் மத உணர்வாளர்களின் எதிர்ப்பை சந்தித்து வருகிறார்…

ராப் பாடகியான டாமி ஜெனிசிஸ், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது யூடியூப் சேனலில் ட்ரூ ப்ளூ என்ற தலைப்பில் புதிய ஆல்பம் பாடலை வெளியிட்டார். பாலியல் மற்றும் பாலினத்துடன் தொடர்பான கருத்துகளை கொண்ட இந்த பாடலில் அவர் உடல் முழுவதும் நீள நிறத்தை பூசி கையில் சிலுவையுடன் நடித்துள்ளார்.

இந்த பாடலில் அவரது தோற்றம் மற்றும் செயல்பாடுகள் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதில் அவரின் ஆடை மற்றும் தோற்றம் இந்து தெய்வங்களில் ஒன்றான காளியையும், அவரது செயல்பாடுகள் கிறிஸ்தவ மதத்தை அவமதிக்கும் வகையில் இருப்பதாக  மத உணர்வாளர்கள் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.

விமர்சனங்கள் குறித்து டாமி ஜெனிசிஸ் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், “உங்களுக்கு பிடிக்கும், பிடிக்காது என்பதைப் பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை. அது உங்களுக்கானது அல்ல. நீங்கள் இருக்கும் இடத்தின் காரணமாக அது உங்களுக்கு பொருந்தாமல் இருக்கலாம்” என்று கூறியுள்ளார்.

யார் இந்த டாமி ஜெனிசிஸ்:

ஜெனிசிஸ் யாஸ்மின் மோகன்ராஜ் என்று அழைக்கபடும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இந்த ராப் பாடகி, கனடாவின் வான்கூரில் பிறந்தார். கார் கலை மற்றும் வடிவமைப்பு பல்கழைக்கழகத்தில் பட்டம் பெற்ற இவர், இசை வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன்பு திரைப்படம் மற்றும் சிற்பம் ஆகியவற்றைப் பயின்றார்.

கடந்த 2010 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இசை வாழ்க்கையை தொடங்கிய இவர், அவ்ஃபுல் ரெக்கார்ட்ஸுடன் ஒப்பந்தமான பிறகு 2013 -ல் தனது முதல் மிக்ஸ்டேப் வேர்ல்ட் விஷன் ஆல்பத்தை வெளியிட்டார். தொடர்ந்து 2018 -ல் தனது சொந்தத் தலைப்பில் அறிமுக ஆல்பமான டாமி ஜெனிசிஸை வெளியிட்டார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.