முல்லை பெரியாறு அணை குறித்து சர்ச்சைக்குரிய வீடியோ வைரல் – பி.ஆர்.பாண்டியன் கண்டனம்

முல்லை பெரியாறு அணை குறித்து சர்ச்சைக்குரிய வீடியோ வைரலாகி வருவதால், கேரள முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும் என பி.ஆர்.பாண்டியைன் கோரிக்கை வைத்துள்ளார்.   அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு…

முல்லை பெரியாறு அணை குறித்து சர்ச்சைக்குரிய வீடியோ வைரலாகி வருவதால், கேரள முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும் என பி.ஆர்.பாண்டியைன் கோரிக்கை வைத்துள்ளார்.

 

அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், கோட்டூர்புரத்தில் உள்ள நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை அவரது இல்லத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்க வந்தார். ஆனால் அரசு அலுவல் காரணமாக அமைச்சர் காட்பாடியில் இருப்பதால், துரைமுருகன் இல்ல வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பி.ஆர் பாண்டியன், காவிரி டெல்டா பகுதிகளில் ஓ.என்.ஜி சி நிறுவனம் அரசு ஆணைக்கு புறம்பாக செயல்படுகிறது என்றார்.

 

இது அரசுக்கு தெரிந்து நடக்கிறதா தெரியாமல் நடக்கிறதா என்பதை அரசு விளக்க வேண்டும் என்றும் இது தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகனை சந்தித்து முறையிட வந்தோம் அவர் காட்பாடியில் இருப்பதால் நாளை அவரை சந்திக்க உள்ளோம் என கூறினார். மேலும் முதலமைச்சர் அலுவலகத்தில் இந்த விவகாரம் தொடர்பாக கடிதம் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.


தென்மேற்கு பருவ மழை பாதிப்பால் மிக பெரிய அளவில் காவிரி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் டெல்டா மாவட்ட வழியோர கிராமங்களில் உள்ள தோட்டகலை பயிர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. குறுவை காப்பீட்டை தமிழக அரசு கைவிட்டதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களை ஏமாற்றுவதற்கு பதிலாக வெளிப்படையான நிவாரணத்தை முதலமைச்சர் அறிவிக்க வேண்டும் என்றார்.

 

முல்லை பெரியாறு அணை வலுவிழந்து உள்ளதாக கேரளாவில் உள்ள சில அரசியல் கட்சிகள் வக்ர புத்தியுடன் சர்சைக்குரிய வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு முதலமைச்சர் கேரள முதலமைச்சரை வலியுறுத்த வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுக்காததன் விளைவாகவே கேரளாவில் விஷமிகளால் சர்சைக்குரிய வீடியோ வைரலாக்கப்படுகிறது என பி.ஆர்.பாண்டியன் குற்றம்சாட்டினார்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.