ஃபோர் ஸ்கொயர் ஸ்டுடியோஸ் (Four Square Studios) சார்பில் பிரபதீஸ் சாம்ஸ் தயாரித்து, இயக்கியுள்ள திரைப்படம் ’கஜானா’. இப்படம் வரும் மே 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கிடையே, படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று (மே 3) சென்னை, பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பலர் கலந்து கொண்டனர்.
அவர்களில் ஒருவரான தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் ராஜா பேசும் போது, ”பணம் கொடுத்தால் தான் யோகி பாபு படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியும் என்று கூறுகிறார். இது தவறானது, இதற்கு கண்டனம் தெரிவிக்கிறேன்” என்று பேசினார். அவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த நிலையில், அவரது கருத்துக்கும், ‘கஜானா’ படத்திற்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை என்று ‘கஜானா’ படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான பிரபதீஸ் சாம்ஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இயக்குநர் பிரபதீஸ் சாம்ஸ் பேசியதாவது,
“யோகி பாபு எங்கள் படத்திற்கு ஆரம்பத்தில் இருந்து தற்போதுவரை முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். படப்பிடிப்பு தேதி கொடுப்பதில் இருந்து, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் உள்ளிட்ட போஸ்டர்கள் வெளியிடுவது என அனைத்திற்கும் அவர் சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடக்கும் தேதியன்று தவிர்க்க முடியாத காரணங்களால் தன்னால் பங்கேற்க இயலாது, என்று அவர் முன்கூட்டியே தெரிவித்து விட்டார். நிகழ்ச்சியை சிறப்பாக நடந்துங்கள், என்று எங்களுக்கு வாழ்த்தும் தெரிவித்தார்.
ஆனால், நாங்கள் சற்றும் எதிர்பார்க்காத நிலையில், தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினராக இருக்கும் ராஜா, யோகி பாபு பற்றி சர்ச்சையான கருத்துகளை தெரிவித்தார். அவர் பேசியது முழுக்க முழுக்க அவரது தனிப்பட்ட கருத்தும், தயாரிப்பாளர் சங்கத்தின் பிரச்னையும்தான். அதற்கும் எங்களுக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை. எங்கள் படத்தை பொறுத்தவரை யோகி பாபு எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்.
மேலும், ‘கஜானா’ இரண்டாம் பாகத்திலும் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் யோகி பாபு நடிக்க இருக்கிறார். அதற்கான தேதிகளையும் அவர் எங்களுக்கு கொடுத்து விட்டார். எங்கள் நிகழ்ச்சியில் அவரைப் பற்றி வெளியான சர்ச்சையான கருத்துக்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்”
இவ்வாறு இயக்குநர் பிரபதீஸ் சாம்ஸ் தெரிவித்தார்.








