மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவருக்கு எதிராக தொடர் போராட்டம்: சாலையிலேயே மல்யுத்த பயிற்சி மேற்கொண்ட வீரர்கள்!!

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வழக்குப்பதிவு செய்ய கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வீரர், வீராங்கனைகள் சாலையிலேயே மல்யுத்த பயிற்சி மேற்கொண்டனர். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின்…

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வழக்குப்பதிவு செய்ய கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வீரர், வீராங்கனைகள் சாலையிலேயே மல்யுத்த பயிற்சி மேற்கொண்டனர்.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்த நிலையில், அவர் மீது வழக்குப்பதிவு செய்ய கோரி முன்னணி மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்சி மாலிக், சங்கீதா போகத் மற்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வழக்குப்பதிவு செய்ய டெல்லி காவல்துறைக்கு உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் டெல்லி காவல்துறை வரும் 29ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறும், மனுதாக்கல் செய்த வீராங்கனைகளின் அடையாளம் தெரியாத வகையில், நீதித்துறை ஆவணங்களில் இருந்து அவர்களின் பெயர்களை நீக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர், வீராங்கனைகள் சாலையிலேயே உடற்பயிற்சி மற்றும் மல்யுத்த பயிற்களை மேற்கொண்டு எதிர்ப்பை பதிவு செய்தனர். சர்வதேச அரங்கில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்திய வீராங்கனைகளின் இந்த குற்றச்சாட்டு மிகவும் தீவிரமாக பார்க்கப்படுகிறது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.