திருப்பதி மலை பாதைகளில் தொடரும் சிறுத்தைகள் நடமாட்டம்… நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்…

திருப்பதி மலை பாதைகளில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. திருப்பதி மலை காட்டில் சிறுத்தை புலிகளின் எண்ணிக்கை சமீப காலத்தில் அதிகரித்துள்ளன. திருப்பதி திருமலை…

திருப்பதி மலை பாதைகளில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி மலை காட்டில் சிறுத்தை புலிகளின் எண்ணிக்கை சமீப காலத்தில் அதிகரித்துள்ளன. திருப்பதி திருமலை இடையே உள்ள சாலைகள் மற்றும் பக்தர்கள் பாதயாத்திரையாக நடந்து செல்ல பயன்படுத்தும் வழித்தடங்கள் ஆகியவற்றின் அருகே சிறுத்தை புலிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது தேவஸ்தான நிர்வாகத்திற்கு தெரிய வந்துள்ளது.

நேற்று முன்தினம் இரவு ஆறு வயது சிறுமியை சிறுத்தை புலி தூக்கி சென்று கடித்து குதறி தின்ற சம்பவத்தை தொடர்ந்து மலைப்பாதையில் செல்லும் பக்தர்கள் குறிப்பாக குழந்தைகளின் பாதுகாப்பிற்கு போலீசாரும், தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினரும் அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்.

எனவே இன்று முதல் நடந்து மலையேறி செல்லும் குழந்தைகள் கையில் அந்த குழந்தையின் பெயர், பெற்றோர் பெயர், பெற்றோரின் தொலைபேசி எண், போலீஸ் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் ஆகிய விவரங்கள் அடங்கிய டோக்கன் ஒன்றை கட்டி அனுப்பி வைத்து வருகின்றனர் தேவஸ்தான விஜிலன்ஸ் துறையினர்.

இதனிடையே இன்றும் இரண்டு இடங்களில் குழந்தைகள் வழி தவறிய சம்பவங்கள் நடைபாதையில் நடைபெற்றன. அந்த குழந்தைகளை பாதுகாப்பு ஊழியர்கள் தேடி கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

எனவே நாளை முதல் 15 வயதிற்கு உட்பட்ட சிறுவர், சிறுமியர் பாதயாத்திரையாக நடந்து மலையேறி செல்ல அனுமதி இல்லை என்றும், மலைப்பாதைகளில் மோட்டார் பைக்கைகளில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பயணிக்க அனுமதி அளிக்கப்படும் என்றும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. வனவிலங்குகளின் நடமாட்டம் குறைந்து நிலைமை கட்டுப்பாட்டிற்குள் வரும் வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும்.

மேலும் நேற்றும் திருப்பதி மலையில் உள்ள அலிப்பிரி வழி நடைபாதை, வாகனங்கள் செல்லும் சாலை ஆகியவற்றில் ஐந்து இடங்களில் சிறுத்தை புலிகள் நடமாட்டத்தை தேவஸ்தான நிர்வாகம் அடையாளம் கண்டறியப்பட்டது.

எனவே திருப்பதி திருமலை இடையே மோட்டார் பைக்களில் பயணிப்பவர்கள், பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள் ஆகியோர் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.