போதைப் பொருள் கடத்தலில் பல முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக தேடப்பட்டு வந்த திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்ட நிலையில்,  இந்த விவகாரத்தில் பல முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில்…

போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக தேடப்பட்டு வந்த திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்ட நிலையில்,  இந்த விவகாரத்தில் பல முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் கடந்த மாதம் ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்திய 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்,  இந்த கடத்தலில் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் முக்கிய பங்காற்றியது தெரிய வந்தது.

இதையடுத்து,  ஜாபர் சாதிக்கிற்கு சொந்தமான இடங்களில் மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.  தொடர்ந்து,  ஜாபர் சாதிக் நேரில் ஆஜராகும்படி அவரது வீட்டில் நோட்டீஸ் ஒட்டிய அதிகாரிகள், அவரது வீட்டிற்கு சீல் வைத்தனர்.  இந்நிலையில், கடந்த சில வாரங்களாக தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக் ராஜஸ்தானில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.  அதன் அடிப்படையில் தீவிர சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள்,  ஜெய்ப்பூர் அருகே ஜாபர் சாதிக்கை இன்று கைது செய்தனர்.இந்நிலையில், ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டது தொடர்பாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு துணை இயக்குநர் ஞானேஷ்வர் சிங் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  திருவனந்தபுரம், ஐதராபாத், மும்பை, ஜெய்பூர், டெல்லி உள்ளிட்ட பல இடங்களில் ஜாபர் சாதிக் தலைமறைவாக இருந்ததாக தெரிவித்தார்.  ‘மங்கை’ என்ற திரைப்படம் போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தில் எடுக்கப்பட்டதாக கூறினார்.

இதையும் படியுங்கள் : போதைப் பொருள் வழக்கில் தேடப்பட்டு வந்த ஜாபர் சாதிக் கைது!

மேலும்,  இந்த போதைப்பொருள் கடத்தலில் பல முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு உள்ளதாக தெரிவித்தார்.  மும்பையில் போதைப்பொருள் கடத்தலில் ஜாபர் சாதிக் மீது ஏற்கெனவே சில புகார்கள் வந்ததாக கூறிய ஞானேஷ்வர் சிங்,  போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைக்கப்பெற்ற பணத்தை,  ரியல் எஸ்டேட், திரைப்படங்கள் ஆகியவற்றில் ஜாபர் சாதிக் முதலீடு செய்துள்ளதாக தெரிவித்தார்.  அரசியல் கட்சிகளுக்கு நிதியுதவி அளித்தாரா என்பது தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாகவும்,  பாலிவுட் திரைத்துறையிலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் ஞானேஷ்வர் சிங் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.