புதுச்சேரியில் நிலம் சம்பந்தமான அதிகாரத்தை துணைநிலை ஆளுநருக்கு வழங்குதல் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனையில் உள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்த சீராய்வு கூட்டம் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் முதலமைச்சர் ரங்கசாமி, தலைமைச் செயலர் ராஜீவ் வர்மா, காவல்துறை இயக்குனர் கிருஷ்ணியா, மத்திய மனிதவள அமைச்சக அதிகாரி மற்றும் அரசு செயலர்கள் கலந்து கொண்டனர். மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனையில் உள்ள புதுச்சேரி தொடர்பான பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்து துணைநிலை ஆளுநர் விரிவாக ஆலோசனை நடத்தினார்.
புதுச்சேரி மாநிலத்திற்கான மத்திய நிதி உதவியை அதிகரித்தல், மத்திய அரசின் திட்டங்களுக்கு 100% நிதி உதவி அளித்தல், நிலம் சம்பந்தமான அதிகாரத்தை துணைநிலை ஆளுநருக்கு வழங்குதல், புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கம், காவல்துறை நவீன மயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
புதுச்சேரி மாநிலம் தொடர்பான வளர்ச்சி திட்டங்களைச் செயல்படுத்த மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று உள்துறை அமைச்சக அதிகாரி உறுதியளித்தார். மேலும், புதுச்சேரி மாநில வளர்ச்சித் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிப்பது, குறிப்பிட்ட கால இடைவெளியில் அவற்றை மறுஆய்வு செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.
இந்த கூட்டத்தில் நிலம் சம்பந்தமான அதிகாரத்தை துணைநிலை ஆளுநருக்கு வழங்க வேண்டும் எனஆலோசிக்கப்பட்டது சர்ச்சைக்குரியதாக்கியுள்ளது. ஏற்கனவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரத்தை ஆளுநர் பரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில் அமைச்சரவையிம் அதிகார வரம்பிற்குள் உள்ள காவல்துறை, நிலம் தொடர்பான உரிமையில் நிலம் தொடர்பான அதிகாரத்தை ஆளுநருக்கு வழங்க வேண்டும் என முதல்வரை வைத்துக்கொண்டு விவாதிக்கப்பட்டது வெட்ட வெளிச்சமான அதிகார பறிப்பு என்று மக்கள் வாழ்வுரிமை இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.








