தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன. வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், 12 ஆயிரத்து 838 பதவிகளுக்கு நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிட, 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனையை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி, கோவில்பட்டி, காயல்பட்டினம், திருச்செந்தூர் உள்ளிட்ட நகராட்சிகள் மற்றும் 18 பேரூராட்சிகளில் உள்ள 60 வார்டுகளில் போட்டியிட மொத்தம் 480 பேர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர். இதனையடுத்து இந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று வருகிறது. இதனை மாநகாராட்சி ஆணையரும் மாவட்ட தேர்ல் அதிகாரியுமான சாருஸ்ரீ கண்காணித்து வருகிறார்.
அதேபோல, தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்த வடுகபட்டி பேரூராட்சியில் 3 வார்டுகளில் வேட்புமனு தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வடுகபட்டி பேரூராட்சியின் 1-வது வார்டில் முத்துச்செல்வி, 10-வது வார்டில் ஜெயராமன் மற்றும் 11-வது வார்டில் விமலா ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களை எதிர்த்து 3 வார்டுகளிலும் வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், 3 சுயேட்சைகளும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 1,10 மற்றும் 11 ஆகிய 3 வார்டுகளிலும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டும் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாதது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
அண்மைச் செய்தி: திமுக எம்.பி வில்சன் தாக்கல் செய்துள்ள தனி நபர் மசோதாவின் முழு விவரம்!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் மாநகராட்சி, குன்றத்தூர் மற்றும் மாங்காடு நகராட்சிகள் மற்றும் ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர், வாலாஜாபாத் ஆகிய மூன்று பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள 156 பதவிகளுக்கு ஆயிரத்து ஒரு வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதனையடுத்து அவர்களது வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








