அதானி குழும முறைகேடு புகார் தொடர்பாக வரும் மார்ச் 13ம் தேதி காங்கிரஸ் கட்சி சார்பில் பேரணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பெர்க் என்ற நிறுவனம், அதானி குழுமம் தொடர்பான குற்றச்சாட்டுகளை ஆய்வறிக்கையாக கடந்த மாதம் 25-ம் தேதி வெளியிட்டது. அதில், அதானி குழுமத்தைச் சேர்ந்த நிறுவனங்கள் நிதிநிலை அறிக்கையில் தவறாக தகவல்களை அளித்து பங்குச் சந்தைகளில் ஆதாயத்தைத் தேடுவதாக குற்றம்சாட்டியது.
இதனைத் தொடர்ந்து, அதானி குழுமத்திற்கு சொந்தமான நிறுவனங்களின் பங்குகள், பங்குசந்தைகளில் கடும் சரிவை சந்தித்தன. குழுமத்தின் நன்மதிப்பைப் பாதுகாக்க நிலுவையில் இருந்த கடன்களை அதானி குழுமம் திருப்பிச் செலுத்தியது. எனினும், அதனால் பங்குகளின் வீழ்ச்சியை தடுக்க முடியவில்லை.
இந்த விவகாரத்தை காங்கிர்ஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கையில் எடுத்து போராடி வருகின்றன. ராகுல்காந்தியும் நாடாளுமன்றத்தில் பலமுறை கேள்வி எழுப்பினார். இந்த விவகாரத்தால் நாடாளுமன்றம் முடங்கியது. உண்மை வெளிவராமல் திசை திருப்பும் முயற்சியில் பிரதமர் மோடி ஈடுபட்டுள்ளதாக ராகுல் குற்றம் சாட்டினார். இந்நிலையில் அதானி குழும முறைகேடு புகார் தொடர்பாக மார்ச் 13ம் தேதி காங்கிரஸ் கட்சி பேரணி அறிவித்துள்ளது.
அண்மைச் செய்தி: டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா கைது நடவடிக்கையின் பின்னணி என்ன?
அதன்படி, அனைத்து மாநில தலைநகரங்களிலும் ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி, பொதுக்கூட்டம் நடத்த இருப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. அனைத்து மாநில தலைநகரங்களிலும் வரும் ஏப்ரல் மாதம் மெகா பேரணி நடத்த திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் கே.சி.வேணுகோபால் தெரிவித்தார். இந்த பேரணியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல் காந்தி உரையாற்றுவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.







