பிரதமர் பதவி மீது காங்கிரஸ் கட்சிக்கு விருப்பம் இல்லை என அக்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதி எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் ஜூன் 24ஆம் தேதி பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது ஆலோசனை கூட்டம் நேற்றும், இன்றும் பெங்களூரூவில் நடைபெற்று வருகிறது.
2-நாள் கூட்டத்தின் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தொடக்கவுரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
பிரதமர் பதவியில் காங்கிரஸ் கட்சிக்கு விருப்பம் இல்லை. இந்த சந்திப்பின் நோக்கம் நமக்கான அதிகாரத்தைப் பெறுவது அல்ல. நமது அரசியலமைப்பு, ஜனநாயகம், மதச்சார்பின்மை மற்றும் சமூகநீதியைப் பாதுகாப்பதே.
இங்குள்ள கட்சிகளிடம் கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால் கருத்தியலில் முரண்பாடு இல்லை. நாங்கள் 26 கட்சிகள், 11 மாநிலங்களில் ஆட்சியில் இருக்கிறோம்.
இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே பேசினார்.







