காங்கிரஸ் கட்சி என்னை 91 முறை அவதூறாக பேசியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பிடார் மாவட்டம் ஹம்னாபாத்தில் பிரதமர் மோடி பரப்புரை மேற்கொண்டார். அப்போது, அங்கு நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்றார்.
கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் ஊழல் குறித்து பேசும் நபர்களை அந்த கட்சியினருக்கு பிடிக்காது என்றும், அப்படி பேசுவோரை காங்கிரஸ் கட்சியினர் அவதூறாக பேசுவதாகவும் குறிப்பிட்டார். தன்னை பற்றி இதுவரை 91 முறை காங்கிரஸ் கட்சியினர் அவதூறாக பேசியுள்ளதாகவும், ஆனால், ஒவ்வொரு முறையும் தம்மை பேசும் போது காங்கிரஸ் கட்சி அழிவை சந்திப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, பிரதமர் மோடியை ‘விஷ பாம்பு’ என்று விமர்சித்தாக கூறப்படும் நிலையில் அதற்கு பதிலளிக்கும் விதமாக மோடி இவ்வாறு பேசினார்.
தொடர்ந்து வடக்கு பெங்களூருவில் பிரம்மாண்ட பேரணியில் பிரதமர் மோடி பங்கேற்றார். 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட வாகனத்தில் பிரதமர் மோடி, ஊர்வலமாக சென்றார். அப்போது வழிநெடுகிலும் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் பிரதமர் மோடிக்கு மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.








