காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை தமிழகத்தில் சிறுபான்மையினருக்கு அதிக பிரதிநிதித்துவம் கொடுப்பதில்லை என எம்.பி. கார்த்தி சிதம்பரம் பேசியுள்ளார்.
மாமனிதன் வைகோ என்ற ஆவணப்படம் இன்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள சத்தியம் திரையரங்கில் வெளியிடப்பட்டது.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப. சிதம்பரம், பாமக என்பது ஒரு குறுகிய வட்டத்திற்குள் செயல்படும் ஒரு அரசியல் கட்சி. என்னை பொறுத்தவரை பாமக தலைமையில் கூட்டணிக் கட்சி அமையும் என்று அவர்கள் வேண்டு மென்றால் ஆசைப்படலாம் என பேசினார்.
மேலும், தமிழ்ச் சங்க விழாவிற்குத் தமிழ்நாட்டிலிருந்து தமிழ் அறிஞர்கள் மற்றும் தமிழக அரசாங்கத்திற்கு பிரதிநிதித்துவம் இல்லாமல் நடத்தியது ஒரு கேள்விக்குறியாக தான் உள்ளது. பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை பொருத்தவரை முழுமையாக ஆய்வு செய்து அனைவருக்கும் வழங்க வேண்டும் என கூறினார்.
தொடர்ந்து பேசிய கார்த்தி ப சிதம்பரம், அரசியல் கட்சியில் தற்போது சீட் கேட்பவர்கள் வந்தால் அவர்களிடம் நீங்கள் இறுதியாக படித்த புத்தகம் எது என்று கேட்டால் முக்கால் வாசி பேருக்கு சீட் கொடுக்க முடியாது. நாள்தோறும் நிறையப் படிப்பவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்றும் அவர் கூறினார்.







