பெங்களூரு விடுதிக்கு வரத் தொடங்கிய காங். வேட்பாளர்கள் – “எனது அணி” என ட்வீட் செய்த டி.கே.சிவக்குமார்!

கர்நாடக தேர்தலில் முன்னிலை வகிக்கும் காங்கிரஸ் வேட்பாளர்களை பெங்களூருவில் உள்ள தனியார் நட்சத்திர விடுதிக்கு வர கட்சித் தலைமை அழைப்பு விடுத்த நிலையில், வேட்பாளர்கள் அங்கு வரத் தொடங்கியுள்ளனர்.  224 தொகுதிகளை கொண்ட கர்நாடக…

கர்நாடக தேர்தலில் முன்னிலை வகிக்கும் காங்கிரஸ் வேட்பாளர்களை பெங்களூருவில் உள்ள தனியார் நட்சத்திர விடுதிக்கு வர கட்சித் தலைமை அழைப்பு விடுத்த நிலையில், வேட்பாளர்கள் அங்கு வரத் தொடங்கியுள்ளனர். 

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக கடந்த 10ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என மூன்று பெரும் கட்சிகளுக்கிடையே மும்முனை போட்டி நிலவிய நிலையில், மொத்தமாக 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர்.

கடந்த 10-ம் தேதி நடைபெற்ற தேர்தலில், 73.19 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள 36 வாக்கு எண்ணும் மையங்களில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

பெரும்பான்மையான தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியே முன்னிலை வகித்து வருகிறது. இதனால் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி, மேள தாளங்கள் முழங்க கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக வாக்கு எண்ணிக்கையின்படி முன்னிலை வகித்து வரும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அனைவரும் பெங்களூரு வரும்படி, கட்சித் தலைமை அழைப்பு விடுத்தது. இதற்காக நட்சத்திர விடுதி ஒன்றையும் காங்கிரஸ் ஏற்பாடு செய்தது.

அதன்படி முன்னிலை பெற்றுள்ள காங்கிரஸ் வேட்பாளர்கள் அனைவரும் பெங்களூரு விடுதிக்கு வரத் தொடங்கியுள்ளனர். வேட்பாளர்களுடன் தான் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், ‘My Team’ (எனது அணி) என்று குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.