காங்கிரஸ் மாநிலங்களவை எம். பி ராஜிவ் சாதவ் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்குக் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
46 வயதாகும் இவர் கொரொனா தொற்று காரணமாகத் தனியார் மருத்துவமனையில் முன்பே அனுமதிக்கப்பட்டார். இவர் கொரோனவிலிருந்து குணமடைந்து வந்த நிலையில், சைடோமிகலே வைரஸ் (Cytomegalovirus) பாதிப்பால் இவர் உயிரிழந்ததாக மகாராஷ்டிராவின் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எம்பி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், எம். பி ராஜிவ் சாதவ் இழப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது:
‘எனது நண்பர் ராஜிவ் சாதவின் இழப்பு என்னைச் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அவர் ஒரு தலை சிறந்த தலைவர். காங்கிரஸ் கட்சியின் கருத்துருவாக்கத்திற்கு அவர் பெரும் பங்காற்றி உள்ளார். எங்கள் அனைவருக்கும் இது பேரிழப்பு. இவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்’ என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.







