தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் , “ முதுபெரும் தலைவர் – தோழர் திரு. நல்லகண்ணு அய்யா அவர்கள் மறைவுற்றார் என்ற செய்தி நம்மையெல்லாம் கடும் துயரத்திற்கு ஆளாக்கியுள்ளது. பாட்டாளி மக்களுக்காகவே வாழ்ந்து நிறைந்த பகட்டில்லாத் தோழர் திரு. நல்லகண்ணு அவர்களின் நினைவும், புகழும் என்றென்றும் காலத்தால் அழியாத கல்வெட்டாக மக்கள் மனதில் நிலைத்திருக்கும்! தமிழ்நாட்டின் உயரிய விருது பெற்ற நம் தகைசால் தமிழரை – இனிய தோழரை முழு அரசு மரியாதையுடன் செவ்வணக்கம் செலுத்தி வழியனுப்பி வைப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாலர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், “தனக்கென வாழாமல், பிறர்க்கென வாழ்ந்த’ சிறந்த பண்பாளர் திரு. நல்லக்கண்ணு அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார்……!
காங்கிரஸ் மாநில கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் “ தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் சமூக இயக்கங்களுக்கு அவரது மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். தோழர் இரா. நல்லகண்ணு அவர்களின் நினைவு எப்போதும் சமூகநீதிக்கான போராட்டங்களில் வழிகாட்டியாக இருக்கும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், பொதுவுடமை இயக்க தலைவர்கள் மற்றும் நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியியிட்டுள்ள இரங்கல் பதிவில் “மிக இளம் வயதிலேயே அரசியலில் அடியெடுத்து வைத்து, நாட்டின் சுதந்திரத்திற்காகவும், அனைத்துத் தரப்பு மக்களின் உரிமைகளுக்காகவும் நூற்றுக்கணக்கான போராட்டங்களை முன்னெடுத்ததோடு, வாழும் வரை எளிமையின் அடையாளமாகவே அறியப்பட்டவர் ஐயா திரு. நல்லக்கண்ணு அவர்கள். அன்னாரின் பொதுச்சேவையும் அர்ப்பணிப்பும் மக்கள் மனதிலும் அரசியல் வரலாற்றிலும் என்றும் நீங்கா இடம்பிடித்திருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் ” இந்திய ஒன்றிய அரசு அவரது ஈகம் நிறைந்த பொதுவாழ்வையும்; தேசத்தின் விடுதலைக்கான அறப்போராட்டத்தில் நல்லகண்ணு ஆற்றிய பங்களிப்பையும் போற்றும் வகையில் அவருக்கு தேசத்தின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருதினை வழங்கிச் சிறப்பிக்க வேண்டுமென இந்திய ஒன்றிய அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம். முதுபெரும் தலைவர் தோழர் ஆர்என்கே அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் உள்ளிட்ட உற்றார் உறவினர்களுக்கும் பொதுவுடைமை இயக்கத் தோழர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்” வலியுறுத்தியுள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில் “ அடித்தட்டு மக்களின் நலனுக்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட அவர், தமக்காக எதையும் சேர்த்துக் கொள்ளாதவர். இந்திய விடுதலைப் போராட்டத்திலும், விடுதலைக்குப் பிறகு பொதுவுடைமை இயக்கத்திலும் ஈடுபட்டதற்காக பல ஆண்டுகளை சிறையில் கழித்தவர். தியாகத்திற்கு உதாரணமாகத் திகழ்ந்த அவர், அனைத்துக் கட்சியினராலும் மதிக்கப்படுபவராக திகழ்ந்தார். தோழர் நல்லக்கண்ணு அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், தோழர்கள், பொதுவுடைமை இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் “ பெருமதிப்பிற்குரிய ஐயா நல்லகண்ணு அவர்களின் மறைவு தமிழ் மண்ணுக்கும், மக்களுக்கும் மட்டுமல்ல, தூய்மையான அரசியலுக்கும், அப்பழுக்கற்ற பொதுவாழ்விற்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும். ஐயா அவர்களின் மறைவால் துயருற்றுள்ள அவருடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், அரசியல் நண்பர்களுக்கும், இந்தியப் பொதுவுடைமை கட்சியினருக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, இப்பெருந்துயரில் பங்கெடுக்கின்றேன்” என்று கூறியுள்ளார்.
மநீம கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள பதிவில் “ ஏழை எளிய மக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் ஆகியோரின் நலன்களுக்காக 80 ஆண்டு காலம் அயர்வே இல்லாமல் களத்தில் நின்றவர். நேர்மைக்கும் தூய்மைக்கும் எளிமைக்கும் அரசியல் நாகரீகத்துக்கும் ஒரு கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தவர். தகைசால் தமிழரே, செவ்வணக்கம். உமது புகழ் நிலைக்கட்டும். உமது பணிகள் எம்மில் தொடரட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் “ மாறாத கொள்கைப் பிடிப்புடன் வாழ்ந்து மறைந்த தோழர் திரு. நல்லகண்ணு அவர்களின் இழப்பு தமிழக மக்களுக்கு ஈடு செய்ய முடியாதது. அவரது ஆத்மா சாந்தியடையட்டும். ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
தவெக தலைவர் விஜயின் இரங்கல் பதிவில், “ தந்திரப் போராட்ட வீரர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், விவசாயிகளுக்காகவும் மக்களின் உரிமைகளுக்காகவும் தம் வாழ்நாளின் பெரும் பகுதியைச் செலவிட்ட போராளி, தோழர் அய்யா இரா.நல்லகண்ணு அவர்கள் காலமான செய்தியறிந்து மன வேதனை அடைந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.







