வெளிநாடுகளில் கோடிக்கணக்கான ரூபாயை ரகசியமாக முதலீடு செய்திருப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் பெரும் பணக்காரர்கள், அரசியல் வாதிகள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் பனாமா, சைப்ரஸ், துபாய் உள்ளிட்ட நாடுகளில் பணத்தை சட்டவிரோதமாக பதுக்குவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளிநாடுகளில் இதுபோன்று சட்ட விரோதமாக பணம் பதுக்கியவர்கள் குறித்த விவரம் வெளியானது. அதில், ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சன் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், இதுபோன்று சட்ட விரோதமாக பணம் பதுக்கியிருப்பவர்கள் குறித்த விவரத்தை பண்டோரா பேப்பர்ஸ் வெளியிட்டுள்ளது.
இந்த விவரமானது உலகின் முன்னணி 150 செய்தி நிறுவனங்களுடன் இணைந்து சேகரித்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஆவணத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கர் பெயர் இடம்பெற்றுள்ளது. இது அவரின் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சச்சின் தரப்பில் இதுதொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், சச்சின் முதலீடு செய்திருப்பது சட்டப்பூர்வமானது. அந்த முதலீடு அனைத்தும் அவரின் வருமானத்தில் இருந்தே மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கு அரசிடம் முறையாக கணக்கு காட்டப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வெளியான இந்த பட்டியலில் ரஷ்ய அதிபர் புதின், பாப் பாடகி ஷகீரா, ஜோர்டான் மன்னர், உக்ரைன் அதிபர், செக் குடியரசு பிரதமர், முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர் ஆகியோர் பெயர்களும் உள்ளதாக கூறப்படுகிறது.







