கர்நாடக மாநிலத்தில் சுகாதாரமற்ற நீரை அருந்திய 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் விஜயநகர் மாவட்டத்தில் மகரப்பி கிராமம் உள்ளது. இந்த கிராம மக்களுக்கு ராட்சத குடிநீர் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக அந்த குழாயில் கழிவுநீர் கலந்து வந்ததாகவும், இதுதொடர்பாக புகாரளித்தும் ஏதும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த சில நாட்களில் அக்கிராமத்தில் வசித்து வரும் 200-க்கும் மேற்பட்டோருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த தகவலறிந்த போலீசார் மருத்துவமனையில் இருந்து அவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், சுகாதாரமற்ற நீரை அருந்தியதால் தான் அவர்கள் உயிரிழந்தது தெரிய வந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







