அதிமுக குறித்தும் அக்கட்சியின் முன்னணி தலைவர்கள் குறித்தும், அவதூறாக பேசியதாக திமுகவின் தலைமைக் கழக பேச்சாளர் குடியாத்தம் குமரன் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை மாநகர காவல் ஆணையாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிமுக கழக வழக்கறிஞர் பிரிவு மாநில இணை செயலாளர் பாபு முருகவேல் கூறியதாவது:
”இரு தினங்களுக்கு முன்பாக கிங் 360 என்ற யூடியூப் சேனலில் திமுகவின் முன்னாள் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் குடியாத்தம் குமரன் ’தில் இருந்தா நின்னுப்பார்’ என்ற தலைப்பில் தமிழ்நாடு அரசின் முன்னாள் அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகத்தை மிகவும் தரம் தாழ்ந்த வகையில் பேசும் காணொளி காட்சி ஒளிபரப்பாகியுள்ளது.
சி.வி.சண்முகம் 35 ஆண்டுகளுக்கும் மேலாக பொது வாழ்க்கையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர், முன்னாள் அமைச்சர் தற்போது மாநிலங்களவை உறுப்பினராக திறம்பட செயலாற்றிக் கொண்டிருப்பவர். விழுப்புரம் மாவட்ட கழக செயலாளராகவும், தொடர்ந்து நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு அரசின் அமைச்சராகவும் இருந்தவர்.
அந்த காணொளி காட்சியில், குடியாத்தம் குமரன் அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளையும், நா கூசக்கூடிய வார்த்தைகளையும், கொஞ்சம் கூட யோசிக்காமல் அள்ளி வீசி இருக்கிறார். இதே போல தொடர்ந்து அதிமுகவின் மீதும், அதன் முன்னனி தலைவர்களின் மீதும், முன்னாள் முதலமைச்சரின் மீதும் தொடர்ந்து வன்மத்தை பிரயோகிக்கின்ற விதமாகவும், இரு பிரிவினருக்கு இடையே துவேஷத்தை ஏற்படுத்துகின்ற விதமாகவும், அச்சுலேற்ற முடியாத, மிகவும் தரம் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தியும் பேசி வருகிறார்.
இந்த பேச்சை கண்டிக்கும் விதமாகவும், இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கடந்த மார்ச் மாதம் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும், குடியாத்தம் காவல் ஆய்வாளரிடமும், குடியாத்தம் சரக துணை கண்காணிப்பாளரிடமும் புகார் மனு கொடுக்கப்பட்டு சமூக பதிவேட்டில் பதிவேற்றமும் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் இன்று வரை எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை.
இது போல தொடர்ந்து தரம் தாழ்ந்து பேசுகின்ற, கொலை மிரட்டல் விடுகின்ற, இரு பிரிவினருக்கு துவேஷத்தை ஏற்படுத்துகின்ற விதமாக தொடர்ந்து பேசி வரும் குடியாத்தம் குமரன் மீது உடனடியாக தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் மூலமாகவும், இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகளின் மூலமாகவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை மாநகர காவல் ஆணையாளரை நேரில் சந்தித்து புகார் மனு அளித்திருக்கிறேன். அந்த புகாரின் மீது உரிய உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருக்கிறார்.” இவ்வாறு பாபு முருகவேல் கூறினார்.







