தனக்கு கொலை மிரட்டல் விடுத்து வரும் யூடியூபர் ஜி.பி முத்து உள்ளிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காதல் சுகுமார் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
காதல், திருவிளையாடல் ஆரம்பம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் துணை நடிகராக பணியாற்றிவர் சுகுமார். இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா காலக்கட்டத்தில் ஆன்லைன் மூலமாக பள்ளி மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில் சமூக வலைதளங்களில் இலக்கியா, ஜிபி முத்து உட்பட பல நபர்கள் ஆபாசங்கள் நிறைந்த வீடியோவை பதிவிட்டு வருகின்றனர்.
இதனை தடுத்து நிறுத்த வேண்டி சமீபத்தில் எனது நண்பர் சர்வதேச மனித உரிமைகள் கவுன்சிலின் மாநில பொதுசெயலாளர் ஏழுமலை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக நானும் ஊடகங்கள் வாயிலாக பேட்டி ஒன்றில் கருத்து தெரிவித்தேன்.
இதையடுத்து நெல்லை சங்கர், சேலம் மணி மற்றும் ஜிபி முத்து ஆகியோர் தொடர்ந்து சமூக வலைதளம் வாயிலாக எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்கள். அவர்கள் மீது உடனடியாக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆபாசங்கள் நிறைந்த இவர்களின் சமூக வலைதள பக்கத்தை தடை செய்ய வேண்டும் எனவும் காதல் சுகுமார் அளித்த புகாரில் தெரிவித்துள்ளார்.







