திருவள்ளூர் அருகே உயர்மின்னழுத்தக்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி ஒருவர் மின் கோபுரத்தில் ஏறி உயிரிழப்பு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் அதிகத்தூர் பகுதியில் உள்ள கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையின் மின்சாரத்திற்காக, கூடுதலாக உயர் மின் அழுத்த கோபுரம் அமைக்கும் பணியை தமிழ்நாடு மின்சார வாரியம் செயல்படுத்தி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பணி நடக்கும் இடத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் திடீரென அருகிலிருந்த 80 அடி உயர மின்கோபுரத்தில் ஏறியதோடு, உயர்மின்கோபுரம் அமைக்கும் பணிகளை நிறுத்த வலியுறுத்தி உயிரிழப்பு மிரட்டல் விடுத்தார். இதனையடுத்து, காவல்துறையினர் உயர்மின்கோபுரம் அமைக்கும் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர்.
காவல் துறையினர் பேச்சு வார்த்தை நடத்திய பின் தொடர்ந்து அவர் மின் கோபுரத்தில் இருந்து இறங்கி வந்தார். பின்னர் உயிரிழப்பு மிரட்டல் விடுத்த கம்யூனிஸ்ட் நிர்வாகியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







