காமன்வெல்த் போட்டியில் தற்போது வரை 4 பதக்கங்கள் பெற்று இந்தியா 8-வது இடத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் பர்மிங்ஹான் நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகிறது. காமன்வெல்த் அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கு இடையே நடைபெறும் இந்த போட்டியில் இந்தாண்டு 72 நாடுகள் கலந்து கொண்டுள்ளன. இதில், தடகளம், பேட்மின்டன், ஹாக்கி, குத்துச்சண்டை, பளு தூக்குதல், கிரிக்கெட் உள்ளிட்ட 19 போட்டிகளும், 8 பாரா விளையாட்டுகளும் இடம்பெறுகின்றன.
ஜூலை 28-ம் தேதி தொடங்கிய இந்த போட்டிகள் ஆகஸ்டு 8-ம் தேதி வரை நடைபெறுகிறது. காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவை சார்ந்த 111 வீரர்கள் மற்றும் 104 வீராங்கனைகள் என மொத்தம் 215 பேர் 16 விதமான விளையாட்டு பிரிவுகளில் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் 2018-ம் ஆண்டு நடைபெற்ற 21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தடகளம், பளுதூக்குதல், துப்பாக்கி சுடுதல், டேபிள் டென்னிஸ், பேட்மிண்டன், குத்துச்சண்டை, மல்யுத்தம் என பல்வேறு விளையாட்டு பிரிவுகளில் மொத்தம் 26 தங்கங்களை வென்று இந்தியா சாதனை படைத்தது. இதனிடையே, கடந்த 3 நாட்களாக நடைபெற்ற போட்டிகளில் இந்தியா இதுவரை 4 பதக்கங்களை பெற்றுள்ளது.
பளுதூக்குதல் போட்டியின் 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மீராபாய் சாணு தங்கப்பதக்கம் வென்றார். 55 கிலோ எடைப்பிரிவு கொண்ட மற்றொரு போட்டியில் பிந்தியா ராணிதேவி 202 கிலோ எடையை தூக்கி வெள்ளி பதக்கம் வென்றார். ஆண்களுக்கான 55 கிலோ எடை பிரிவில் சங்கட் சர்கார் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். 61 கிலோ எடைப்பிரிவில் குருராஜா பூஜாரி 269 கிலோ எடையை தூக்கி வெண்கல பதக்கம் வென்றார்.
இவ்வாறு நான்கு பதக்கங்களுடன் காமன்வெல்த் பதக்க பட்டியலில் இந்தியா தற்போது 8-வது இடத்தில் உள்ளது. 32 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா முதல் இடத்திலும், 13 பதக்கங்களுடன் நியூசிலாந்து 2-வது இடத்திலும், இங்கிலாந்து 3-வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
– இரா.நம்பிராஜன்








